கோத்தகிரியில் நடைபெற்ற தேசிய கைப்பந்து போட்டி: தமிழ்நாடு-பாண்டிசேரி அணி சாம்பியன்

By ஆர்.டி.சிவசங்கர்


கோத்தகிரி: கோத்தகிரியில் நடந்த தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு-பாண்டிசேரி அணி 19 வயதுக்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றன.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி அரங்கில் இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் மற்றும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் பள்ளிகள் பங்கேற்ற தேசிய கைப்பந்து போட்டி கடந்த நான்கு நாட்களாக நடந்தது.

ஆந்திரா-தெலங்கானா, பிஹார்-ஜார்கண்ட், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, வட இந்தியா, ஒடிசா, குஜராத்-ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம்-ஜம்முகாஷ்மீர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு-பாண்டிச்சேரி, மேற்கு வங்காளம்-வடகிழக்கு, மத்தியப்பிரதேசம் ஆகிய அணிகள் பங்கேற்றன.

14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் ஆண் மற்றும் மகளிருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. 13 பிராந்தியங்களில் இருந்து 444 சிறுவர்கள் மற்றும் 408 சிறுமிகள் இந்த போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் அடிப்படையில் நடத்தப்பட்டன.

இறுதி போட்டிகள் இன்று நடந்தன. இதில், 14 வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் உத்தரப்பிரதேசம்-ஜம்மு காஷ்மீர் அணியும், 17 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் வட இந்தியா அணியும், 19 வயதுக்கு உட்பட்டவர்கள் தமிழ்நாடு-பாண்டிச்சேரி அணியும் வெற்றி பெற்றன.

பெண்கள் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தமிழ்நாடு-பாண்டிச்சேரி அணியும், 17 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆந்திரா- தெலங்கானா அணியும், 19 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் தமிழ்நாடு-பாண்டிச்சேரி அணியும் வெற்றி பெற்றன.

வெலிங்டன் ராணுவ மைய தலைவர் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர் சி.ஹரி நிஷாந்த் மற்றும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் டாக்டர்.பி.எல்.சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE