சென்னை: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 80 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 102, ரவீந்திர ஜடேஜா 86 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 65 நிமிடங்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில் 91.2 ஓவர்களில் 376 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடேஜா மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காத நிலையில்தஸ்கின் அகமது பந்தில் வெளியேறினார். 7-வது விக்கெட்டுக்கு ஜடேஜா-அஸ்வின் ஜோடி 199 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆகாஷ்தீப் 17 ரன்களில் நடையை கட்டினார். மட்டையை சுழற்றிய அஸ்வின் 133 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 113 ரன்எடுத்த நிலையில் தஸ்கின் அகமதுவீசிய பந்தை தூக்கி அடித்த போது டீப் மிட் ஆஃப் திசையில்கேட்ச் ஆனது. கடைசி வீரராகபும்ரா 7 ரன்னில் வெளியேறினார்.
வங்கதேச அணி தரப்பில்ஹசன் மஹ்முத் 5, தஸ்கின் அகமது 3 விக்கெட்களை வீழ்த்தினர். மெஹிதி ஹசன், நஹித் ராணா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது. ஷத்மான் 2 ரன்னில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் போல்டானார். ஜாகிர் ஹசன் (3), மொமினுல் ஹக்(0) ஆகியோர் ஸ்டெம்புகள் சிதறஆகாஷ் தீப் பந்தில் நடையை கட்டினர். தொடர்ந்து நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (20) முகமது சிராஜ் பந்திலும், முஸ்பிகுர் ரஹிம் (8) பும்ரா பந்திலும் ஆட்டமிழந்தனர். 40 ரன்களுக்கு5 விக்கெட்களை இழந்த நிலையில் ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ்ஜோடி பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
51 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை ரவீந்திர ஜடேஜா பிரித்தார். லிட்டன் தாஸ் 42 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா வீசியபந்தை ஸ்வீப் ஷாட் விளையாடினார். லாங் லெக் திசையை நோக்கி பறந்த பந்தை பதிலி வீரரானதுருவ் ஜூரெல் அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் செய்தார். அடுத்த சில ஓவர்களில் ஜடேஜா வீசிய பந்தை ஷகிப் அல் ஹசன் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் மேற்கொண்டார். ஆனால் பந்து அவரது மட்டையில் உரசி பின்னர் காலில் பட்டு ரிஷப் பந்திடம் கேட்ச் ஆனது. ஷகிப் அல்ஹசன் 64 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் சேர்த்தார்.
» IND vs BAN | ஷுப்மன் கில் நம்பிக்கை ஆட்டம்: 2-ம் நாளில் இந்தியா 81 ரன்கள் சேர்ப்பு
» டிராவிஸ் ஹெட், லபுஷேன் கூட்டணி: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸி.
இதையடுத்து ஹசன் மஹ்முத் 9, தஸ்கின் அகமது 11 ரன்களில் பும்ரா பந்தில் வெளியேறினர். கடைசி வீரராக நஹித் ராணா 11 ரன்களில் முகமது சிராஜ் பந்தில் நடையை கட்ட வங்கதேச அணி 47.1 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ ஆன்ஆனது. மெஹிதி ஹசன் 52 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஆகாஷ் தீப், ஜடேஜா, சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். வங்கதேச அணிக்கு பாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணி 227 ரன்கள்முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடர்ந்தது. ரோஹித் சர்மா 5 ரன்னில் தஸ்கின் அகமது பந்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் நஹித் ராணா பந்திலும் ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய விராட்கோலி 37 பந்துகளில், 2 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் மெஹிதி ஹசன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 23 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் 64 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்களும், ரிஷப் பந்த் 13 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 12 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். வங்கதேசம் அணி தரப்பில் தஸ்கின் அகமது, நஹித் ராணா, மெஹிதி ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
‘இந்தியாவில் முதல் 5’ - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹசன் மஹ்முத் 83 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் அவர், இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் வங்கதேச பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். முதல் நாளில் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்த ஹசன் மஹ்முத் நேற்றைய 2-வது நாளில் ஜஸ்பிரீத் பும்ரா விக்கெட்டையும் கைப்பற்றினார்.
12,000: சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவிலான ஆட்டங்களிலும் சொந்த நாட்டில் 12 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இந்த சாதனையை வங்கதேச அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் போது நிகழ்த்தினார் விராட் கோலி. அவர், இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 4,161 ரன்களும் ஒருநாள் போடடியில் 6,268 ரன்களும், டி 20-ல் 1,577 ரன்களும் எனஒட்டுமொத்தமாக 12,006 ரன்கள் குவித்துள்ளார். இந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் சொந்த நாட்டில் 14,192 ரன்களை வேட்டையாடி முதலிடத்தில் உள்ளார்.
ஒரே நாளில் 17 விக்கெட்கள்: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - வங்கதேச அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாளான நேற்று மட்டும் 17 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. முதல் முன்னிங்ஸில் இந்திய அணியின் எஞ்சிய 4 விக்கெட்கள் சரிந்தன. தொடர்ந்து வங்கதேச அணியின் 10 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டது. இதன் பின்னர் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3 விக்கெட்களை தாரை வார்த்தது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago