‘ஸ்டார்’களுக்கு பாடம் எடுத்த அஸ்வின், ஜடேஜா; வங்கதேச கேப்டன் செய்த மாபெரும் தவறு!

By ஆர்.முத்துக்குமார்

சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், கே.எல்.ராகுல் போன்ற ‘சோ கால்டு’ ஸ்டார்கள் பல்லிளிக்க அஸ்வின் அவர்களுக்கெல்லாம் பாடம் எடுக்கும் ஒரு தரமான இன்னிங்ஸை ஆடி இந்திய அணியை 144/6 என்ற சரிவுப்பாதையிலிருந்து மீட்டெடுத்தார். ஜடேஜா கிளாசிக் டெஸ்ட் ஸ்டைலில் தொடங்கி பிறகு அவரும் அஸ்வின் அதிரடி ஜோதியில் கலந்தார்.

பிட்சில் ஈரப்பதம், வானிலையும் மேகமூட்டமாக இருந்ததால் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப்பிடம் சிக்கிச் சின்னாபின்னமாவதைத் தவிர்க்க இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார் ஷாண்டோ. அவர் முடிவு பலன் அளித்தது, ஆனால் பிற்பாடு கோட்டை விட்டு விட்டார். ஆட்டத்தின் பிடி இப்போது வங்கதேசத்திடமிருந்து நழுவி விட்டது.

மஹ்மூத் இவர் சாதாரண பவுலர் அல்ல, பாகிஸ்தானில் இடுகாட்டுப் பிட்சில் நிரூபித்தார். இங்கு இப்போது இந்திய ஸ்டார் பேட்டர்களை வீழ்த்த லேசான ஸ்விங், நல்ல லெந்த் இருந்தாலே போதும் பெரிய வேகம் தேவையில்லை என்று காட்டியுள்ளார். பாகிஸ்தானின் ஆகிப் ஜாவேத் ஒரு காலத்தில் இப்படி வீசித்தான் ஷார்ஜாவில் இந்திய பேட்டர்களைக் கவிழ்ப்பார். ஆகிப் ஜாவேத் போன்ற ஒரு பவுலர் தான் மஹ்முது. இவர் ஆலன் டோனால்ட் வங்கதேச பவுலிங் பயிற்சிக்காலத்தில் உருவான ஒரு பவுலர்.

இவர் மீது ஆலன் டோனல்ட் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவரது நம்பிக்கையை மஹ்மூது வீண் செய்யவில்லை. மேற்சொன்ன இந்திய ஸ்டார் பேட்டர்கள் டி20 பாதிப்பினால் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை தொட்டுக் கெட்டனர். அதிலும் விராட் கோலி ஆடிய ஷாட் அராஜகமானது, மிகவும் பொறுப்பற்ற ஷாட். பந்துக்கு எந்த ஒரு மரியாதையும் தராத ‘ஈகோயிஸ்ட்’ ஷாட், அதனால் காலியானார். இவர் பெயர் கெடாமல் ஓய்வு பெறப்போவதில்லை என்பது திண்ணம்.

வேகப்பந்து வீச்சுகளை மட்டுமே நம்பியிருக்கும் அணிகளுக்கு அதன் கேப்டன் வேகப்பந்து வீச்சு பற்றி தெரிந்தவராக இருப்பது அவசியம். கிளைவ் லாய்ட் முதல் இயன் சாப்பல், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாஹ், மார்க் டெய்லர், மைக்கேல் கிளார்க் வரை, இங்கிலாந்தின் மைக் பிரியர்லி என்று பட்டியலிட்டால் வேகப்பந்து வீச்சாளர்களைக் கையாள்வது என்பது ஒரு கேப்டன்சி கலை என்பது இவர்களை வைத்துப் புரிந்து கொள்ளக் கூடியதே.

வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்ட்டோ பாகிஸ்தானில் அருமையாக கேப்டன்சி செய்தார். அங்கு பாகிஸ்தான் பேட்டர்கள் ஒன்றுமில்லாமல் போனதால் வேகப்பந்து வீச்சாளர்கள் களைப்படைவதற்கு முன்னரே ஆல் அவுட் ஆகினர். ஆனால் இந்திய பேட்டிங் லைன் அப் ஆழமானது, கடைசி வரை ஆடுவார்கள், குறிப்பாக அஸ்வின், ஜடேஜா சமீப காலங்களில் மீட்டுக்கொடுத்த தருணங்கல் நிறைய.

இந்நிலையில் வங்கதேச கேப்டன் ஷாண்ட்டோ, தன் வேகப்பந்து வீச்சாளர்களை சரியான முறையில் சுழற்சியில் பயன்படுத்திக் கையாண்டிருக்க வேண்டும், ஆனால் அவர் செய்தடோ மேலதிகமாக அவர்களைப் பயன்படுத்தியதே. அதுவும் நேற்றைய ஸ்டார் பவுலரான மஹ்மூது காலை மேட்ச் தொடங்கியது முதல் 11, 11:15 வரை வீச வைக்கப்பட்டார். அதே போல் தஸ்கின் அகமது, அதிவேக புதுப்புயல் ரானா ஆகியோரையும் அளவுக்கதிகமாக முன்னமேயே பயன்படுத்தியதால் நேரம் ஆகியும் ஒவர்க்ள் குறைவாகவே வீசியிருந்தனர்.

கே.எல்.ராகுல் 43வது ஓவரில் ஆட்டமிழக்கும் போது வங்கதேச வெகப்பந்து வீச்சாளர்கள் நேற்றைய ஈரப்பதத்தின் வெம்மையில் களைப்படைந்து விட்டனர். என்பதோடு குறைவான ஓவர்களை வீசியதால் ஓவர்களை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் ஷாண்ட்டோ தள்ளப்பட்டார். இதனால் ஷாகிப் அல் ஹசனையும் மெஹதி ஹசன் மிராஸையும் ஒரு 20-25 ஓவர்கள் வீச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட அஸ்வின், ஜடேஜா அந்தத் தருணத்தில் ஆக்ரோஷம் காட்டி செட்டில் ஆகிவிட்டனர்.

ஆனால் அஸ்வின் வேகப்பந்து வீச்சையும் அதியற்புதமாக ஆடினார். அதுவும் ரானாவை அடித்த அந்த எக்ஸ்ட்ரா கவர் ட்ரைவ், வங்கதேச பீல்டர்கள் அனைவரும் வெறுமனே வேடிக்கைத்தான் பார்க்க முடிந்தது. நேற்றைய நாளின் சிறந்த ஷாட் அஸ்வினின் எக்ஸ்ட்ரா கவர் ட்ரைவ் என்றால் மிகையாகாது. அதோடு பேக்ஃபுட் பஞ்ச், ஆன் ட்ரைவ், மேலேறி வந்து தூக்கிய சிக்ஸ், கவர் திசையில் பஞ்ச், புல் ஷாட் என்று அனைத்து ரேஞ்சுகளையும் காட்டி ஆடிய விதம் விவிஎஸ். லஷ்மண் பேட்டிங்கை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.

ஷாண்ட்டோ அஸ்வின், ஜடேஜா விக்கெட்டுகளை வீழ்த்த எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. ஓவர்களை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் அவரால் இதில் கவனம் செலுத்த முடியவில்லை. வேகப்பந்து வீச்சை நம்பியிருக்கும் போது ஐந்தைந்து ஓவர்களாகப் பிரித்துப் பிரித்து மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் இடையிய்டையே போதிய இளைப்பாறுதல் கிடைக்குமாறு பந்து வீச்சை ஏற்பாடு செய்ய வேண்டும் இதுதான் கேப்டன்சி என்பது,

ஆனால் அனுபவமற்ற ஷாண்ட்டோ, பிட்சைப் பார்த்தவுடன் ஆவலாதியாக வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் வீசச் செய்து களைப்பாக்கி விட்டார், இதனை அஸ்வின், ஜடேஜா நன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர். கோலியும், ரோஹித் சர்மாவும் இந்த வேலையைச் செய்து வேகப்பந்து வீச்சாளர்களை களைப்படையச் செய்யும் பேட்டிங்கை ஆடியிருந்தால் மஹ்மூது நேற்று 4 விக்கெட்டுகளை எடுக்க சிரமப்பட்டிருப்பார். அஸ்வினின் பேட்டிங் அவர்களுக்குப் பாடமாக அமைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

மேலும்