அதிரடியாக சதம் விளாசியது எப்படி? - மனம் திறக்கும் அஸ்வின் | IND vs BAN முதல் டெஸ்ட்

By செய்திப்பிரிவு

சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 112 பந்துகளில், 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவரது ஸ்டிரைக் ரேட் 91.07 ஆகும். இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தவித்த நிலையில் ஜடேஜாவுடன் இணைந்து தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு இந்திய அணியை சரிவில் இருந்து வலுவான நிலைக்கு கொண்டு வந்தார்.

முதல் நாள் ஆட்டத்துக்கு பின்னர் அஸ்வின் கூறியதாவது: சொந்த மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது எப்போதுமே சிறப்பு வாய்ந்ததுதான். நான் கிரிக்கெட் விளையாட மிகவும் விரும்பும் மைதானம் இது.

சேப்பாக்கம் மைதானம் எனக்கு பல அற்புதமான நினைவுகளை கொடுத்துள்ளது. அதிரடியாக ரன்கள் குவிக்க முடிந்ததற்கு டிஎன்பிஎல் தொடரில் இருந்து நேரடியாக இங்கு விளையாடியதே காரணம். அந்த தொடரில் எனது பேட்டிங்கை முன்னேற்ற வேலைகள் செய்தேன்.

நான் எப்போதும் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே பேட்டை சுழற்றிக் கொண்டே இருப்பேன். இதில் சில விஷயங்களில் வேலை செய்தேன், கூடுதலாக சில ஷாட்களையும் மேற்கொண்டேன். இதுபோன்ற ஆடுகளத்தில் ரிஷப் பந்த் போன்று மட்டையை சுழற்றினால்தான் ரன்கள் சேர்க்க முடியும். பழைய சேப்பாக்கம் ஆடுகளம் போன்று பவுன்ஸ் இருந்தது. சிவப்பு மண் ஆடுகளத்தில் கூடுதலாக சில ஷாட்களை விளையாட முடியும்.

அதைத்தான் செய்தேன். களத்தில் ஜடேஜா மிகவும் உதவியாக இருந்தார். ஒரு கட்டத்தில் எனக்கு அதிகளவில் வியர்வை வெளிப்பட்டு சோர்வடைந்தேன். இதை கவனித்த ஜடேஜா, அந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று ஆலோசனைகள் கூறி என்னை வழிநடத்தினார். ஒரு கட்டத்தில் அவர், 2 ரன்களை 3 ரன்களாக மாற்ற வேண்டாம் என்று கூறினார். அது எனக்கு உதவியாக இருந்தது.

சேப்பாக்கம் ஆடுகளம் வழக்கமான பழைய பாணியில் உள்ளது. ஆடுகளத்தில் பந்துகள் திரும்பவும் செய்யும், பவுன்ஸும் இருக்கும். ஆட்டத்தின் பிற்பகுதியில் ஆடுகளம் அதன் தந்திரங்களை செய்யத் தொடங்கும். புதிய பந்து பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும். 2-வது நாள் ஆட்டத்தை நாங்கள் புதிதாக தொடங்க வேண்டும். இவ்வாறு அஸ்வின் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE