அஸ்வின் 102*, ஜடேஜா 86* ரன் விளாசல்: முதல் நாளில் இந்திய அணி 339 ரன்கள் குவிப்பு

By பெ.மாரிமுத்து

சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆடுகளத்தின் தன்மை மற்றும் வானிலையை பயன்படுத்தி வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அழுத்தம் கொடுத்தனர்.

ரோஹித் சர்மா 19 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் மஹ்முத் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல், ஹசன் மஹ்முத் பந்தில் நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஹசன் மஹ்முத் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசிய பந்தை விராட் கோலி டிரைவ் செய்ய முயன்ற போது பந்து மட்டை விளிம்பில் பட்டு லிட்டன் தாஸிடம் கேட்ச் ஆனது.

இந்திய அணியின் முக்கியமான இந்த 3 விக்கெட்களும் ஒரு மணி நேரத்துக்குள் வீழ்த்தப்பட்டது. 34 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் ரிஷப் பந்த், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.

மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 23 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் ரிஷப் பந்த் 52 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் மஹ்முத் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 62 ரன்கள் சேர்த்தது. நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் தனது 5-வது அரைசதத்தை கடந்த நிலையில் 118 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் நஹித் ராணா பந்தில் வெளியேறினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய கே.எல்.ராகுல் 16 ரன்களில் மெஹிதி ஹசன் பந்தில் ஆட்டமிழந்தார். 144 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜாவுடன் இணைந்து தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு ரன்கள் சேர்த்தார்.

நஹித் ராணா வீசிய 44-வது ஓவரின் கடைசி இரு பந்துகளையும் அஸ்வின் பவுண்டரிக்கு விளாசினார். ஹசன் மஹ்முத் வீசிய 50-வது ஓவரின் 3-வது பந்தில் ஜடேஜா ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸர் பறக்கவிட்டார். தொடர்ந்து ஹசன் மஹ்முத் வீசிய 52-வது ஓவரில் அஸ்வின் 2 பவுண்டரிகள் அடித்தார். தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு விரட்ட இந்திய அணி 200 ரன்களை கடந்தது. இதே ஓவரின் 3-வது பந்தை அஸ்வின் மிட்விக்கெட் திசையில் சிக்ஸர் பறக்கவிட்டார்.

ஜடேஜா 73 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார். இது அவரது 21-வது அரை சதமாக அமைந்தது. மெஹிதி ஹசன் வீசிய 73-வது ஓவரின் 3-வது பந்தில் அஸ்வின் சிக்ஸர் விளாச இந்திய அணி 300 ரன்களை கடந்தது. தொடர்ந்து மெஹிதி ஹசன் வீசிய 75-வது ஓவரின் 2-வது பந்தை ஜடேஜா டீப் மிட்விக்கெட் திசையில் சிக்ஸர் விளாசினார். அதிரடியாக விளையாடிய அஸ்வின் 108 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இது அவரது 6-வது சதமாக அமைந்தது.

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 80 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது. அஸ்வின் 112 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 102 ரன்களும், ஜடேஜா 117 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 86 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு சுமார் 3 மணி நேரம் களத்தில் நின்று 227 பந்துகளில் 195 ரன்கள் சேர்த்துள்ளது.

வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்முத் 4 விக்கெட்களை வீழ்த்தினார். நஹித் ராணா, மெஹிதி ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்கும் நிலையில் இந்திய அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

2 சதங்களும், 5 விக்கெட்களும்: சேப்பாக்கம் மைதானத்தில் 5 விக்கெட்களை பலமுறையும், 2 சதங்களையும் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் கபில் தேவுடன் அஸ்வின் இணைந்துள்ளார். அவர், சேப்பாக்கம் மைதானத்தில் 4 முறை 5 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தியுள்ள நிலையில் தற்போது 2-வது முறையாக சதமும் அடித்துள்ளார். கபில் தேவ், சேப்பாக்கத்தில் 2 சதங்களை அடித்திருந்தார். அதேவேளையில் பந்து வீச்சில் இருமுறை 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

8-வது இடமும் சதமும்… டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8-வது வீரராக களமிறங்கி அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் அஸ்வின் 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவர், 8-வது இடத்தில் களமிறங்கி 4 சதங்களை அடித்துள்ளார். இந்த வகையில் நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரி 5 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் கமரன் அக்மல், மேற்கு இந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 3 சதங்கள் அடித்துள்ளனர்.

அதிக வயதில் சதம்: அதிக வயதில் சதம் அடித்த 4-வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் அஸ்வின், சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய அஸ்வினின் வயது 38 வருடம் 2 நாட்களாகும். இந்த வகையில் விஜய் மெர்சண்ட் 40 வருடம் 21 நாட்கள், ராகுல் திராவிட் 38 வருடம் 307 நாட்கள், வினோ மன்கட் 38 வருடம் 249 நாட்கள், சச்சின்' டெண்டுல்கர் 37 வருடம் 253 நாட்களில் சதம் அடித்திருந்தனர்.

தொடர்ச்சியாக 2-வது சதம்: வங்கதேச அணிக்கு எதிரான சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணியின் அஸ்வின் சதம் விளாசி அசத்தினார். சேப்பாக்கம் மைதானத்தில் அவர், சதம் விளாசுவது இது 2-வது முறையாகும். கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் சதம் விளாசியிருந்தார்.

7-வது விக்கெட்டுக்கு சாதனை: வங்கதேச அணிக்கு எதிரான சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா-அஸ்வின் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் 7-வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இது அமைந்தது. இதற்கு முன்னர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கு நடைபெற்ற டெஸ்டில் கருண் நாயர்-ஜடேஜா ஜோடி 138 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது ஜடேஜா-அஸ்வின் ஜோடி முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

37.4 ஓவரில் 195 ரன்: வங்கதேசம் அணிக்கு எதிராக சேப்பாக்கத் அணிக்கு தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 80 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 42.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்களே சேர்த்திருந்தது. ஆனால் அடுத்த 37.4 ஒவர்களில் இந்திய அணி 195 ரன்களை வேட்டையாடியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE