தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் வெற்றி: ஆப்கன் அபாரம்

By செய்திப்பிரிவு

ஷார்ஜா: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உள்ளது ஆப்கானிஸ்தான் அணி. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டியில் அபார பந்து வீச்சின் மூலம் தென் ஆப்பிரிக்காவை 106 ரன்களில் ஆல் அவுட் செய்தது.

ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 33.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மூன்று, ஐந்து மற்றும் ஏழாவது ஓவர்களை வீசிய ஆப்கானிஸ்தானின் ஃபசல்ஹக் பரூக்கி, தென் ஆப்பிரிக்காவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ரீசா ஹென்ரிக்ஸ் மற்றும் கேப்டன் எய்டன் மார்க்ரமை போல்ட் செய்தார். அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா. முதல் பத்து ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென் அப்பிரிக்கா.

ஆட்டத்தில் 7 ஓவர்கள் வீசிய ஃபசல்ஹக் பரூக்கி, 35 ரன்கள் கொடுத்து மொத்தமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆப்கன் பந்து வீச்சாளர்கள் அல்லா கசன்ஃபர் 3 மற்றும் ரஷித் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கை ஆப்கன் விரட்டியது. இதில் அல்லா கசன்ஃபர், 10 ஓவர்கள் வீசிய 20 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார்.

அஸ்மதுல்லா ஒமர்சாய் (25 ரன்கள்), குல்பதின் நைப் (34 ரன்கள்) எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். 26 ஓவர்களில் இலக்கை அடைந்தது ஆப்கானிஸ்தான். இந்த வெற்றி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் முன்னேற்றம் மற்றும் அதன் எழுச்சியை சுட்டும் வகையில் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியை தவிர மற்ற ஐசிசி முழு நேர உறுப்பு நாடுகளின் அணிகளை வென்றுள்ளது ஆப்கானிஸ்தான். ஆட்ட நாயகன் விருதை ஃபசல்ஹக் பரூக்கி வென்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE