சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்டில் இன்று மோதல்

By பெ.மாரிமுத்து

சென்னை: இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று (19-ம் தேதி) தொடங்குகிறது.

நஜ்முல் ஹொசைன் ஷான்டோதலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இருஅணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி வீரர்கள் சுமார் ஒரு மாத ஓய்வுக்கு பின்னர் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர்.

அதேவேளையில் வங்கதேச அணி, பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்றகணக்கில் வென்று சாதனை படைத்த நிலையில் இந்திய தொடரை அணுகுகிறது. பாகிஸ்தான் தொடரில் வங்கதேச அணி கடினமான சூழ்நிலைகளில் இருந்து மீண்டு வந்து சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தது. இதனால் அந்த அணி மீது எதிர்பார்ப்பு உள்ளது.

வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் வலுவான சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக உள்ளனர். இவர்களுடன் தைஜூல் இஸ்லாமும் சுழற்பந்து வீச்சில் பலம் சேர்க்கக்கூடியவராக திகழ்கிறார். பாகிஸ்தான் தொடரில் மெஹிதி ஹசன் 10 விக்கெட்கள் வேட்டையாடி இருந்தார். அதேவேளையில் 37 வயதான ஷகிப் அல்ஹசன் மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சில் கைகொடுத்திருந்தார். பாகிஸ்தான் தொடர் முடிவடைந்த உடனேயே சர்ரே அணிக்காக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட இங்கிலாந்து சென்ற அவர்,சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் வங்கதேச அணியுடன் இணைந்துள்ளார். வேகப்பந்து வீச்சில் பாகிஸ்தான் தொடரில் 150கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய நஹித் ராணா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஹசன் மஹ்மூத்,தஸ்கின் அகமது ஆகியோரும் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.

பேட்டிங்கில் முஸ்பிகுர் ரகிம், லிட்டன் தாஸ் ஆகியோர் பிரதான வீரர்களாக உள்ளனர். முஸ்பிகுர் ரகிம், பாகிஸ்தான் தொடரில் 216 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார். அதிலும் அவர், முதல் டெஸ்டில் சேர்த்த 191 ரன்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதேவேளையில் லிட்டன் தாஸ் 2-வதுடெஸ்டில் 26 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தவித்தவங்கதேச அணியை தனது அபாரமான சதத்தால் மீட்டெடுத்தார். காயத்தில் இருந்து மீண்டு அணிக்குதிரும்பியுள்ள தொடக்க வீரரான மஹ்முதுல் ஹசன் ஜாய், ஷத்மான்இஸ்லாம், ஜாகிர் ஹசன், மோமினுல் ஹக், நஜ்முல் ஹொசைன் ஷான்டோ ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமானதாக உள்ளது. ரோஹித் சர்மாவுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்குவார். இதன் பின்னர் ஷுப்மன் கில், விராட் கோலி களமிறங்குவார்கள். கே.எல்.ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளதால் நடுவரிசையில் களமிறக்கப்படக்கூடும். அவர், களமிறங்கினால் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த் இடம் பெறுவார். இதனால் துருவ் ஜூரெல் வெளியே அமரவைக்கப்படக்கூடும். பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, முகமதுசிராஜ் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இடம் பெறுவார்கள். 3-வது சுழற்பந்து வீச்சாளராக அக்சர்படேல் அல்லது குல்தீப் யாதவ் களமிறங்க வாய்ப்பு உள்ளது. ஆடுகளத்தின் தன்மையை கருதி இந்திய அணி நிர்வாகம் 3 வேகப்பந்து வீச்சாளர் தேவை என கருதினால் யாஷ் தயாள் அல்லது ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

சுழல் வலையில் சிக்குவார்களா கோலி - ரோஹித்? 2022-ம் ஆண்டு முதல் இதுவரை வங்கதேச அணி விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் 274 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். இதில் 154 விக்கெட்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியதாகும். இந்த காலக்கட்டத்தில் இந்திய அணி சுழற்பந்து வீச்சில் தடுமாறியுள்ளது. முக்கியமாக ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சுழற்பந்து வீச்சில் தடுமாற்றம் கண்டுள்ளனர். இந்த காலக்கட்டத்தில் விராட் கோலி சுழற்பந்து வீச்சுக்கு எதிராக 37.25 சராசரியுடன் 447 ரன்களும் ரோஹித் சர்மா 37.64 சராசரியுடன் 527 ரன்களும் மட்டுமே சேர்த்துள்ளனர்.

24 முறை விராட் கோலி ஆட்டமிழந்ததில் 12 முறை சுழற்பந்து வீச்சுக்கு இரையாகியிருந்தார். அதேவேளையில் ரோஹித் சர்மா 26 முறை ஆட்டமிழந்ததில் 14 முறை சுழற்பந்து வீச்சில் சிக்கியிருந்தார். ஆஃப் ஸ்பின்னர்கள் விராட் கோலிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளனர். கடந்த 15 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 7 முறை ஆஃப் ஸ்பின்னர்களிடம் வீழ்ந்துள்ளார். ரோஹித் சர்மாவின் நிலைமையும் இதேதான். வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜூல் இஸ்லாம் ஆகியோர் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். இந்த மூவர் கூட்டணி இந்திய பேட்டிங் வரிசைக்கு சவால் தரக்கூடும்.

இந்தியா ஆதிக்கம்: இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையே இதுவரை 13 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் இந்திய அணி 11 முறை வெற்றி கண்டுள்ளது. 2007-ம் ஆண்டு சிட்டகாங்கில் நடைபெற்ற போட்டியும், 2015-ம் ஆண்டு ஃபதுல்லாவில் நடைபெற்ற போட்டியும் டிராவில் முடிவடைந்திருந்தது.

8 மாதங்களுக்குப் பிறகு விராட் கோலி: 8 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் கள மிறங்குகிறார். கடைசியாக அவர், கடந்த ஜனவரி மாத முதல் வாரத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடியிருந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டு தொடரில் கோலி பங்கேற்கவில்லை.

சாதனையை நோக்கி அஸ்வின்: டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்கு எதிராக அதிக விகெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனை ஜாகீர்கான் வசம் உள்ளது. அவர், 31 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இந்த சாதனையை முறியடிக்க இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு 9 விக்கெட்களே தேவையாக உள்ளன. இதை அவர், தற்போது நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படு கிறது. இதுவரை வங்கதேச அணிக்கு எதிராக அஸ்வின் 23 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

அஸ்வினும்.. சேப்பாக்கமும்.. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான 38 வயதான அஸ்வின், சேப்பாக்கம் மைதானத்தில் 4 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 4 முறை 5 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். இரு இன்னிங்ஸிலும் கூட்டாக ஒரு முறை 10 விக்கெட் வேட்டையாடி உள்ளார்.

629 நாட்களுக்கு பிறகு ரிஷப் பந்த்: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் 629 நாட்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார். கடைசியாக அவர், மிர்பூரில் வங்கதேச அணிக்கு எதிராக 2022-ம் ஆண்டு டிசம்பர் 22 முதல் 25 வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். இதன் பின்னர் விபத்தில் சிக்கிய அவர், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. தற்போது வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மறுபிரவேசம் செய்ய உள்ளார்.

சிவப்பு மண் ஆடுகளம்: சேப்பாக்கம் மைதானத்தில் வழக்கமாக டெஸ்ட் போட்டிகளுக்கு கருப்பு மண் ஆடுகளமே அமைக்கப்படும். ஆனால் இம்முறை சிவப்பு மண் ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் முதல் இரு நாட்களில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு கைகொடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணி விவரம் - இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரீத் பும்ரா, யாஷ் தயாள்.

வங்கதேசம்: நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மோமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது, ஜாகர் அலி அனிக்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்