‘ஆர்சிபி-க்கு சாம்பியன் பட்டம்’ - தினேஷ் கார்த்திக் கனவு

By செய்திப்பிரிவு

சென்னை: லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது சீசன் வரும் 20-ம் தேதி ராஜஸ்தானில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழாவில் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பங்கேற்றார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது: அடுத்த ஐபிஎல் சீசன் முதல் ஆர்சிபி அணியின் ஆலோசகராக செயல்பட உள்ளேன். அந்த அணியின் பலமே அதன் ரசிகர்கள் தான். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடியது என்னால் என்றென்றும் மறக்க முடியாது. அந்த அணியை சாம்பியன் ஆக்க வேண்டுமென்பது எனது கனவு.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட முடியாதது வருத்தம்தான். இருப்பினும் ஏல முறையில் வீரர்கள் தேர்வு இருக்கும் போது அதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்.

ஏனெனில், ஆஸ்திரேலிய வீரர்கள் அபார ஃபார்மில் உள்ளனர். உள்நாட்டில் அந்த அணியின் செயல்பாடு அபாரமாக இருக்கும். அதே நேரத்தில் இந்திய அணியை குறைத்து மதிப்பிட முடியாது. நமது வீரர்களின் விடாமுயற்சி குறித்து நாம் அனைவரும் அறிவோம். அந்த வகையில் இந்த தொடரை பார்க்க அற்புதமாக இருக்கும் என கருதுகிறேன். இவ்வாறு தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

39 வயதான தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்காக 2008 முதல் 2022 வரை விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். 257 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த சீசனோடு ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE