உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் குகேஷ் பட்டம் வெல்லக்கூடியவராக இருக்கலாம்: சொல்கிறார் டிங் லிரென்

By செய்திப்பிரிவு

புடாபெஸ்ட்: உலக செஸ் சாம்பியன்ஷிப் வரும் நவம்பர் 20 முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ் மோதுகிறார்.

மதிப்புமிக்க உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை வாகை சூடியுள்ளார். அவருக்கு பின்னர், உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவில் இருந்து தற்போது குகேஷ் கலந்து கொள்ள உள்ளார். குகேஷ் தற்போது, ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடி வருகிறார். அவரை உள்ளடக்கிய இந்திய ஆடவர் அணி முதல் 5 சுற்றுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொடரில் சீனா அணியில் டிங் லிரென் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் கூறும்போது, “செஸ் ஒலிம்பியாட் தொடரில் குகேஷ் அபாரமாக விளையாடி வருவதை நான், பார்க்கிறேன். உலக சாம்பியன்ஷிப்பில் அவர், பட்டம் வெல்லக்கூடியவராக இருக்கலாம். குகேஷ் ரேட்டிங்கில் என்னைவிட அதிகம் உள்ளார். கடந்த ஆண்டில் நான், ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை இழந்தேன். ஆனால் ரேட்டிங் வித்தியாசத்தை சரிசெய்ய முடிந்தவரை போராடி வருகிறேன்” என்றார்.

31 வயதான டிங் லிரென், கடந்த ஆண்டு மே மாதம் ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான இயன் நெபோம்னியாச்சியை தோற்கடித்து உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருந்தார். அதன்பிறகு மன அழுத்தத்துடன் போராடியதால் டிங் லிரென் விளையாட்டில் இருந்து விலகியிருந்தார். இதன் பின்னர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் லிரென் பங்கேற்று ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE