ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: பரூக் சவுத்ரியின் அபார திறனால் ஒடிசாவை வீழ்த்தியது சென்னையின் எஃப்சி

By செய்திப்பிரிவு

புவனேஷ்வர்: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி தனது முதல் ஆட்டத்தில் ஒடிசா எஃப்சியுடன் நேற்று புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் மோதியது. இதில் சென்னையின் எஃப்சி3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் பாக்ஸ் பகுதிக்குள் பந்தை விரைவாக கடத்திச் சென்ற ஒடிசா அணியின் ஹியூகோ பவுமஸை, சென்னையின் எஃப்சி வீரர்சமிக் மித்ரா ஃபவுல் செய்தார். இதனால் ஒடிசா அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதை டியாகோ மவுரிசியோ கோலாக மாற்ற ஒடிசா எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் பாதியில் ஒடிசா எஃப்சி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 48-வது நிமிடத்தில் ஒடிசா எஃப் அணியின் டிபன்டர்களுக்கு அருமையாக போக்குக்காட்டிய கானர் ஷீல்ட்ஸ், கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமாக நின்ற பரூக் சவுத்ரிக்கு பந்தை தட்டிவிட்டார். அவர், அதை கோல் கம்பத்தின் இடது கார்னரில் திணிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.

51-வது நிமிடத்தில் ஒடிசா எஃப்சி அணியின் கோல் கீப்பர் தனது இடத்தில் இருந்து சற்று முன்னேறி வந்து பந்தை காலால் உதைத்தார். அப்போது அதை இடைமறித்த சென்னையின் எஃப்சி அணியின் பரூக் சவுத்ரி,வலுவாக அடித்த ஷாட் கோல் வலையின் இடது கார்னரை துளைத்தது. இதனால் சென்னையின் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

69-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் டேனியல் சிமா சுக்வு பாக்ஸின் மையப்பகுதியில் அடித்த பந்துகோல் வலையின் வலது கார்னரைதுளைத்தது. இதனால் சென்னையின் எஃப்சி 3-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் சென்னையின் எஃப்சி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதன் 5-வது நிமிடத்தில் ஒடிசா எஃப்சியின் ராய் கிருஷ்ணா கோல் அடித்தார். இதனால் ஒடிசா எஃப்சி 2-3 என்ற கணக்கில் நெருங்கி வந்தது. ஆனால் அதன் பின்னர் எஞ்சிய 2 நிமிடங்களிலும் சென்னையின் எஃப்சி கூடுதல் விழிப்புடன் செயல்பட்டது.

முடிவில் சென்னையின் எஃப்சி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்த சீசனை சிறப்பாக தொடங்கியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE