‘தற்கொலை எண்ணம் கூட வந்தது...’ - இந்திய தடகள வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ்

By செய்திப்பிரிவு

மொகாலி: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனதால் தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாக இந்திய தடகள வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கத்தை 800 மற்றும் 1500 மீட்டரில் வென்றிருந்தார் ஹர்மிலன் பெயின்ஸ். இருப்பினும் காயம் காரணமாக பாரிஸ் ஒலிம்பிக்குக்கு அவர் தகுதி பெறவில்லை. இந்தச் சூழலில் அதன் காரணமாக தற்கொலை செய்துகொள்ள நினைத்த வேதனை தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.

“நான் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என விரும்பினேன். அதற்காக கடினமாக உழைத்தேன். ஆனால், அடுத்தடுத்து ஏற்பட்ட காயம் காரணமாக எனது செயல்திறன் பாதிக்கப்பட்டது. பாரிஸ் ஒலிம்பிக் வாய்ப்பும் பறிபோனது. நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். அனைத்தையும் இழந்தது போன்றதொரு வெறுமை நிறைந்த சூழலில் இருப்பதாக உணர்ந்தேன். எது குறித்தும் என்னால் யோசிக்க முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கூட வந்தது. விளையாட்டை விட்டு வெளியேறும் முடிவு வரை சென்றேன்.

எப்படியாவது ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டுமென விரும்பினேன். அதனால்தான் தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் பிரிட்டனில் நடைபெற்ற தடகள பந்தயத்தில் பங்கேற்றேன். அதன் காரணமாக காயத்தின் பாதிப்பு மேலும் அதிகரித்தது. இந்த பாதிப்பினால் எப்படியும் அடுத்த ஒன்பது மாதங்களுக்கு சாதாரணமாக கூட ஓட்ட பயிற்சி மேற்கொள்ள முடியாது. அதனால் எப்படியும் நான் களம் திரும்ப கொஞ்ச காலம் ஆகும். மாடலிங் சார்ந்து செயல்படும் எண்ணம் உள்ளது. அது குறித்த இறுதி முடிவை விரைவில் தெரிவிப்பேன்” என ஹர்மிலன் தெரிவித்துள்ளார். அவரது அம்மா மாதுரி சிங், 2002-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் மற்றும் அவரது அப்பா அமன்தீப், தெற்காசிய போட்டி 1500 மீட்டரிலும் பதக்கம் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE