“இந்தியாவின் தடுப்பாட்டத்துக்கு நாங்கள் சவாலாக இருப்போம்” - ஆஸி. வீரர் நேதன் லயன்

By செய்திப்பிரிவு

சிட்னி: எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்பாட்டத்துக்கு நாங்கள் சவாலாக இருப்போம் என ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் தெரிவித்துள்ளார்.

“இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் இந்தியாவின் மூன்று முக்கிய வீரர்களாக இருக்கிறார்கள். அவர்களது விக்கெட் மிகவும் முக்கியம். அதோடு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ஜடேஜா போன்றவர்களும் அணியில் உள்ளனர். இதனால் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் எங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும்.

இருப்பினும் ஒரு பந்து வீச்சு அணியாக எங்களால் நீண்ட நேரம் பந்து வீச முடியும். எனவே அவர்களுடைய தடுப்பாட்டத்துக்கு நாங்கள் சவாலாக இருந்து வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” என நேதன் லயன் தெரிவித்துள்ளார்.

பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி பெர்த் நகரில் நவம்பர் 22-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. கடைசியாக கடந்த 2014-15ல் இந்தியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை ஆஸ்திரலேயா வென்றிருந்தது. அதன் பின்னர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 4 தொடர்களை இந்தியா வென்றுள்ளது. அதனால் இந்த முறை ஆஸ்திரேலியா வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி, உள்நாட்டில் வங்கதேசம் மற்றும் நியூஸிலாந்து அணிகளுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் அணியின் மிடில் ஆர்டர் சார்ந்து அதிக கவனம் செலுத்தக்கூடும் என நம்பப்படுகிறது.

நேதன் லயன்: கடந்த 2011 முதல் ஆஸ்திரேலிய அணியில் நேதன் லயன் விளையாடி வருகிறார். 36 வயதான அவர், இதுவரை 129 டெஸ்ட் போட்டிகளால் விளையாடி 530 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். வலது கை சுழற்பந்து வீச்சாளர். இந்திய அணிக்கு எதிராக 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 121 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்தியாவுடன் 9 இன்னிங்ஸ்களில் 5+ விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE