2023 ஒருநாள் உலகக் கோப்பையால் இந்தியாவுக்கு கிடைத்த வருவாய் ரூ.11367 கோடி! - ஐசிசி

By ஆர்.முத்துக்குமார்

2023-ம் ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட ஐசிசி உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் 1.39 பில்லியன் டாலர்கள் (ரூ.11,367 கோடி) என்ற மதிப்பில் பெரும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நீல்சன் பொருளாதாரத் தாக்க மதிப்பீட்டாய்வில் தெரியவந்துள்ளதாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் சுற்றுலாத்துறை பெரிய அளவில் பயனடைந்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளிலேயே 2023 உலகக் கோப்பைதான் பொருளாதார தாக்கத்தில் பெரிய உலகக் கோப்பை என்கிறது நீல்சன்.

ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட்டின் குறிப்பிடத்தக்க பொருளாதார சக்தியை நிரூபித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு 1.39 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.11,637 கோடி) பொருளாதார பலன் கிடைத்துள்ளது” என்று ஐசிசி தலைமை நிர்வாகி ஜியோஃப் அலார்டிஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

மேலும் அந்த அறிக்கையில், “போட்டிகளுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வருகையின் காரணமாக, போட்டிகள் நடந்த நகரங்களில் தங்குமிடம், பயணம், போக்குவரத்து மற்றும் உணவு மற்றும் பானங்கள் மூலம் 861.4 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது” என்று கூறியுள்ளது.

ஆனால், இந்த மிகப்பெரிய பொருளாதாரத் தாக்க மதிப்புதான் உண்மையான வருவாயா என்பது பற்றி ஐசிசி திட்டவட்டமாக எதையும் தெரிவிக்கவில்லை.

சாதனையான 1.25 மில்லியன் பார்வையாளர்கள் உலகக் கோப்பைப் போட்டிகளைக் கண்டு களித்துள்ளனர். இதில் கிட்டத்தட்ட 75 சதவீதம் பேர் முதல் முறையாக ஐசிசி 50 ஓவர் போட்டியைப் பார்க்க வந்தவர்கள் என்கிறது ஐசிசி அறிக்கை.

விருந்தோம்பல் துறை மற்றும் பிற துறைகளில் சுமார் 48,000 முழு மற்றும் பகுதி நேர வேலைகள் ஐசிசி உலகக் கோப்பையினால் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிசி அறிக்கை கூறுகின்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE