இந்த 6 வீரர்கள் மீது கைவைக்கவே முடியாது: இந்திய தொடர் குறித்து ஆஸி. பயிற்சியாளர்

By ஆர்.முத்துக்குமார்

நடப்பு ஆண்டின் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணியில் டாப் 6 வீரர்கள் இருந்தே தீருவார்கள், அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.

டேவிட் வார்னர் ஓய்வடைந்ததையடுத்து ஸ்டீவ் ஸ்மித் தவறாக ஓப்பனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். பும்ரா, ஆகாஷ் தீப், சிராஜுக்கு எதிராக ஸ்மித் ‘சர்வைவ்’ ஆவது மிகமிகக் கடினம்.

ஆனால், ஸ்டீவ் ஸ்மித் ஓப்பனிங் தான் ஆட வேண்டுமா என்பதில் விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும், அவர் அப்படி ஓப்பனிங்கில் வேண்டாம், பின்னால் இறங்கட்டும் என்றால் வேறொரு வீரரைத்தான் ஓப்பனிங்கிற்கு அனுப்ப வேண்டும். ஆனால், இப்போதைக்கு இன்னும் எதுவும் நிரந்தரமாக முடிவு செய்யப்படவில்லை என்கிறார் மெக்டொனால்டு.

ஒருவேளை ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக இந்தியாவின் சக்தி வாய்ந்த பவுலிங்குக்கு எதிராக சொதப்புவார் என்று கருதப்பட்டால், அவருக்குப் பதில் நியூசிலாந்துக்கு எதிராக 174 ரன்களைக் குவித்த கேமரூன் கிரீன் தொடக்க வீரராக இறங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

எது எப்படியிருந்தாலும் இப்போதைக்கு கிரீன், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் ஆகியோருடன் ஸ்டீவ் ஸ்மித்தின் இடமும் உறுதியானதே, இந்த 6 வீரர்களில் ஒருவரையும் மாற்று வீரர் கொண்டு நிரப்ப இடமில்லை. எனவே இவர்கள்தான் உறுதியான, இறுதியான டாப் ஆர்டர் என்கிறார் மெக்டொனால்டு.

இந்திய தொடருக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறிய மெக்டொனால்டு, அதற்காகவே அதன் முந்தைய வெள்ளைப்பந்து தொடர்களுக்கு முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணி கடைசி 3 தொடர்களை வென்று கையில் வைத்துள்ளது, ஆஷஸ் தொடரை விடவும் மிக முக்கியமான தொடராக ஆஸ்திரேலியா இந்தியத் தொடரைக் கருதுகிறது. நவம்பர் 22ம் தேதிக்காக நாம் காத்திருக்க முடியாது. ஆம்! பெர்த்தில் தொடங்குகிறது முதல் டெஸ்ட்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE