மண்ணுக்குரிய கால்பந்தை மறந்து வீழ்ச்சியின் பாதையில் பிரேசில் கால்பந்து!

By ஆர்.முத்துக்குமார்

இந்திய ஹாக்கி அணி அதன் உச்சத்திலிருந்து சரிவு கண்டு இப்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் கால்பந்தில் பிரேசில் எப்படியோ அப்படித்தான் உச்சம் பெற்றிருந்தது இந்திய ஹாக்கி.

ஆனால், இன்று பிரேசில் கால்பந்து வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருப்பது வீட்டுக்கொரு கால்பந்து ஜீனியஸ் உருவாகும் கால்பந்துக் கருவறையாக விளங்கிய பிரேசில் நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலகக் கால்பந்து ரசிகர்களிடையேயும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது..

அடுத்த உலகக் கோப்பை கால்பந்துக்குத் தகுதி பெறுவதே சந்தேகம் என்ற அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. நடந்து வரும் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுக் கால்பந்துத் தொடரில் அன்று பராகுவே அணியிடம் 0-1 என்று தோல்வி கண்டதுடன் 5 போட்டிகளில் 4-ல் தோல்வி கண்டு அட்டவணையில் அவர்களது பிரிவில் 5ம் இடம் வகித்து வருகிறது.

5 முறை உலகக் கோப்பைக் கால்பந்தை வென்ற பிரேசில் இப்போது தடுமாறி வருகின்றது. இரண்டு பெருந்தொடர்களில் காலிறுதியில் வெளியேறியது. ஒன்று 2022 உலகக் கோப்பை, இரண்டு கோப்பா அமெரிக்கா தென் அமெரிக்கக் கால்பந்து தொடரில் உருகுவேயிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் வெளியேறியது.

பிரேசில் கால்பந்து என்றாலே தனி வீரர்களின் தனிப்பட்ட அபாரத் திறமையுடன் அணியாகத் திரண்டு சுயநலமில்லாமல் யார் கோல் அடிக்கும் நிலையில் சவுகரியமாக இருக்கிறார்களோ அவர்களுக்குப் பாஸ் செய்வது, வேகத்துடன் விவேகமும் பந்தைக் கடையும் அபாரத் திறமையும் ஐரோப்பிய ஆக்ரோஷத்துக்கு எதிர்நிலையில் தென் அமெரிக்க கற்பனா படைப்பூக்கத்தை வெளிப்படுத்துவதாக இருப்பதையே நம்மில் பலருக்கும் நினைவூட்டும். ஆனால் இன்று இவை எல்லாம் காணாமல் போய்விட்டன.

இப்போதிருக்கும் பிரேசில் அணியின் கால்பந்து பிரேசிலின் உள்ளார்ந்த கால்பந்தாட்டத்தின் சுதந்திரப் படைப்பூக்க கற்பனா சக்தி இல்லாமல் ஐரோப்பிய கால்பந்தாட்டம் போல் செட்-பீஸ் என்பார்களே அதைப்போல் எல்லாமே முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட உத்திகள் வழி நகர்வாக உள்ளது.

ஐரோப்பியக் கால்பந்தின் தாக்கம் இப்போதிருக்கும் பிரேசில் வீரர்களிடத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வினீஷியஸ் ஜூனியர் ஒரு அபாரமான வீரர் அதே போல் தான் ரோட்ரிகோ, எண்ட்ரிக் போன்றோரும் ஆனால் இவர்கள் ஐரோப்பிய கிளப்புகளின் தாக்கத்தைக் கூடுதலாகப் பெற்றவர்கள். நடுக்கள வீரர்களான லுகாஸ் பகெட்டா, புரூனோ கிமாரேஸ் போன்றோர் இங்கிலிஷ் பிரீமியர் லீக் தாக்கம் பெற்றவர்களாக உள்ளனர்.

ஐரோப்பிய, பிரீமியர் லீக் கிளப் கால்பந்தாட்டப் பயிற்சியாளர்கள் கிளப்பின் தேவைகளுக்கேற்ப காய் நகர்த்துபவர்கள், பிரேசிலின் ஆகச்சிறந்த மிட் ஃபீல்டர் ஐரோப்பிய, பிரிமியர் லீக் அணிகளில் கடைசி 15 நிமிடங்களில் இறக்கப்படும் வீரர்களாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் அதிகம்.

பிரேசில் அணியின் தடுமாற்றத்துக்கு கண்கூடாக பராகுவே அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற உலகக்கோப்பைக் கால்பந்து தகுதிப் போட்டியை எடுத்துக் கொண்டால், பிரேசில் அணி முதல் பாதி ஆட்டத்தில் கோலை நோக்கிய ஷாட்களே இல்லாமல் முடிந்தது. இரண்டாம் பாதியில் 3 ஷாட்கள் மட்டுமே கோலை நோக்கிய இலக்கு ஷாட்டாக இருந்தது. கடந்த 2 போட்டிகளில் கால்பந்து நிபுணர்களின் கருத்துப் படி வினிஷியஸ் ஜூனியர் 6 ட்ரிப்ளிங்குகளை மட்டுமே மேற்கொண்டாராம். 4 ஷாட்களே டார்கெட்டை நோக்கி இருந்துள்ளது. 2019-ல் வந்த வினீஷியஸ் ஜூனியர் இதுவரை 35 போட்டிகளில் வெறும் 5 கோல்களையும் 5 அசிஸ்டுகளை மட்டுமே செய்துள்ளார். வினீஷியஸ் ஜூனியர் போன்ற ஒரு திறமைசாலியாலேயே இவ்வளவுதான் முடிகிறது என்றால் பிரேசில் அணியின் பிரச்சனைகளுக்கு இது ஒரு எளிய உதாரணம் மட்டுமே.

மேலும் 2022 உலகக்கோப்பை முடிந்த பிறகு 3 பயிற்சியாளர்களை மாறி மாறி நியமித்தது பிரேசில் கால்பந்து கழகம். இப்போது உலகக்கோப்பைக்குத் தகுதி பெறுவதே உலகின் கால்பந்து உச்ச நாட்டுக்கு ஒரு சிக்கலாக மாறியுள்ளது. அடுத்த சுற்று தகுதிப்போட்டிகளில் சிலே, பெரூ போன்ற அணிகளை எதிர்கொள்வது பிரேசிலுக்கு பெரும் திண்டாட்டமே. தங்கள் மண்ணுக்குரிய கால்பந்து வழிமுறைகளை இழந்து ஐரோப்பிய தாக்கம் பெற்றதனால் ஆய பயன் என்ன? என்பதை பிரேசில் வீரர்கள் யோசிக்க வேண்டும், எங்கு ஆடினாலும் தங்கள் பூர்வீக திறமையை மறக்கலாகாது என்பதற்கு பிரேசிலின் இப்போதைய வீழ்ச்சி ஒரு எதிர்மறை எடுத்துக்காட்டாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்