டிராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டம்: முதல் டி20 போட்டியில் இங்கிலாந்தை வென்ற ஆஸி!

By செய்திப்பிரிவு

சவுதாம்ப்டன்: இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்களில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி ரன் குவித்தார்.

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. இதன் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. டிராவிஸ் ஹெட் மற்றும் மேத்யூ ஷார்ட் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். பவர் பிளேயில் 86 ரன்களை இருவரும் இணைந்து குவித்தனர்.

23 பந்துகளில் 59 ரன்களை விளாசி இருந்தார் ஹெட். 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். ஒரே ஓவரில் 30 ரன்கள் எடுத்து மிரட்டினார். அவரை இங்கிலாந்தின் சாகிப் மொஹமத் அவுட் செய்தார். மேத்யூ ஷார்ட் 41 மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் 37 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டியது. காயம் காரணமாக இந்தப் போட்டியில் கேப்டன் பட்லர் விளையாடவில்லை. அதனால் அணியை பிலிப் சால்ட் வழிநடத்தி இருந்தார். மூன்று வீரர்களை இந்தப் போட்டி இங்கிலாந்து அறிமுகம் செய்திருந்தது. இந்தச் சூழலில் சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்தது. 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த சரிவுக்குப் பின்னர் இங்கிலாந்து அணியால் ஆட்டத்தில் கம்பேக் கொடுக்க முடியவில்லை. 19.2 ஓவர்களில் 151 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வென்றது. ஆட்ட நாயகன் விருதை ஹெட் வென்றார்.

“இந்த தொடரை நாங்கள் நன்றாக தொடங்கியுள்ளோம். நான் அதிரடியாக ஆடி ரன் சேர்க்க முயற்சிக்கிறேன். பந்தின் வேகத்தை நாங்கள் எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறோம். எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை எனக்கு பயிற்சியாளரும், கேப்டனும் அளித்துள்ளனர்” என ஹெட் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE