தெற்காசிய தடகளம்: இந்திய வீராங்கனை சாதனை

By செய்திப்பிரிவு

சென்னை: 4-வது தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியின் மகளிர் உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா 1.80 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். 2-வது இடத்தை இலங்கையின் டி.கே. திமேஷியும், 3-வது இடத்தை வி.பி. நேத்ரா சமாதியும் பிடித்தனர்.

ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சித்தார்த் சவுத்ரி (19.19 மீட்டர்) முதலிடத்தையும், அனுராக் .சிங் காலேர் (18.91 மீட்டர்) 2-வது இடத்தையும், 3-வது இடத்தை இலங்கையின் ஜெயாவி ரன்ஹிதாவும் (15.62 மீட்டர்) பெற்றனர். ஆடவர் 800 மீட்டர் ஓட்டத்தில் இலங்கை வீரர் எச்.டி. ஷாவிந்து அவிஷ்கா முதலிடம் பிடித்து தங்கத்தைத் தட்டிச் சென்றார்.இந்தியாவின் வினோத் குமார் 2-வது இடம் பிடித்து வெள்ளியும், போபண்ணா கிளாப்பா 3-வது இடம் பிடித்து வெண்கலத்தையும் கைப்பற்றினர்.

அபிநயா நடராஜனுக்கு தங்கம்: மகளிர் 100 மீட்டர் பிரிவில் இந்திய வீராங்கனை அபிநயா நடராஜுன் 11.77 விநாடிகளில் முதலாவதாக வந்து தங்கம் வென்றார். இவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கல்லூத்து பகுதியைச் சேர்ந்தவர். இது தெற்காசிய தடகளத்தில் புதிய சாதனையாகும். இதற்கு முன்பு 2018-ல் நடைபெற்ற போட்டியில் இலங்கையின் ஏ.சில்வா 11.92 விநாடிகளில் வந்ததே சாதனையாக இருந்தது. இதே பிரிவில் இந்திய வீராங்கனை சுதீக் ஷா 2-வது இடத்தையும், இலங்கை வீராங்கனை எஸ். விஜேதுன்காகே 3-வது இடத்தையும் பிடித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE