“எண்ணத்திலும் செயலிலும் விராட் கோலி ஓர் ஆஸ்திரேலியர்” - ஸ்டீவ் ஸ்மித்

By செய்திப்பிரிவு

சிட்னி: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் தனக்குள்ள நட்பு குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் ஸ்மித், கோலி பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது. இருவரும் ‘Fab Four’ வீரர்கள் பட்டியலில் இருப்பவர்கள். இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன்னும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள்.

“எங்கள் இருவருக்கும் இடையே நல்ல பிணைப்பு உள்ளது. நாங்கள் அவ்வப்போது மெசேஜ் செய்து பேசிக் கொள்வோம். கோலி, சிறந்த மனிதர் மற்றும் அபார திறன் கொண்ட வீரர். அவருக்கு எதிராக இந்த கோடை கால தொடரில் விளையாடுவது மகிழ்ச்சி தருகிறது. எண்ணத்திலும் செயலிலும் விராட் கோலி ஓர் ஆஸ்திரேலியர். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் ஆட்டத்தின் சவாலான தருணத்திலும் அபாரமாக ஆடி, எதிரணிக்கு சவால் கொடுப்பார். அதனால் தான் நான் அவரை இந்திய அணியில் உள்ள ஆஸ்திரேலிய பாணி வீரர் என சொல்கிறேன்.

ஒரு பேட்ஸ்மேனாக நான் அவருடன் போட்டியிட வேண்டும் என எண்ணியது இல்லை. களத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு உதவ வேண்டும் என்பது எனது விருப்பம்” என ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 109 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஸ்டீவ் ஸ்மித், 9685 ரன்கள் எடுத்துள்ளார். 32 சதம் மற்றும் 41 அரைசதங்கள் பதிவு செய்துள்ளார். இந்திய அணிக்காக 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள கோலி, 8848 ரன்கள் எடுத்துள்ளார். 29 சதம் மற்றும் 30 அரைசதங்களை பதிவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள கோலி, 1352 ரன்கள் எடுத்துள்ளார். 6 சதம் மற்றும் 4 அரைசதங்களை அங்கு பதிவு செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE