அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜன்னிக் சின்னர்

By செய்திப்பிரிவு

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார். 2 மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 6-3, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

23 வயதான ஜன்னிக் சின்னர், கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் கோப்பையை வெல்வது இது 2-வது முறையாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனிலும் அவர், வாகை சூடியிருந்தார். அதேவேளையில் 21 வருடங்களாக அமெரிக்க ஓபனில் ஆடவர் பிரிவில் பட்டம்வெல்ல முடியாத சோகம்அமெரிக்காவுக்கு இம்முறையும் தொடர் கதையாகி உள்ளது. கடைசியாக அந்நாட்டைச் சேர்ந்த ஆண்டி ரோட்டிக்2003-ம் ஆண்டு அமெரிக்கஓபனில் பட்டம் வென்றிருந்தார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற 2-வதுஇத்தாலியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ஜன்னிக் சின்னர். இதற்கு முன்னர் 2015-ம் ஆண்டு மகளிர் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் பிளவியா பென்னட்டா கோப்பையை வென்றிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE