துலீப் டிராபி: ருதுராஜ் கெய்க்வாட், மானவ் சுதர் அபாரம் - இந்தியா ‘சி’ அபார வெற்றி!

By ஆர்.முத்துக்குமார்

அனந்தபூரில் நடைபெற்ற துலீப் டிராபி போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமை இந்தியா டி அணியை, ருதுராஜ் கெய்க்வாட் தலைமை இந்தியா சி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 164 ரன்களுக்கும் 2-வது இன்னிங்சில் 236 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆக, இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 168 ரன்களையும் பிறகு வெற்றி இலக்கான 233 ரன்களை 6 விக்கெட்டுகளை இழந்து அடைந்தது. ருதுராஜ் கெய்க்வாட் தொடக்கத்தில் இறங்கி 48 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 46 ரன்களை அதிரடியாக எடுத்து ஆஃப் ஸ்பின்னர் சரன்ஷ் ஜெயினிடம் ஆட்டமிழந்தார். ஆனால் இந்தத் தொடக்கம் மிக முக்கியமாக அமைந்தது.

இந்தியா சி அணியின் ஆட்ட நாயகன், இடது கைச் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் முதல் இன்னிங்சில் இந்தியா டி அணியின் 7 விக்கெட்டுகளை வெறும் 49 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து கைப்பற்றியதோடு இரண்டாவது இன்னிங்சில் இலக்கை விரட்டும் போது கடைசியில் ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரியுடன் வெற்றி இலக்கை எட்டி அசத்தினார். வெற்றி பெற்றாலும் இந்தியா சி அணி அதாவது ருதுராஜ் அணி டென்ஷனுடனேயே சேஸ் செய்தனர்.

ஏனெனில் வெற்றிக்கு 68 ரன்கள் தேவையாக இருக்கும் சமயத்தில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தெள்ளத் தெளிவாக இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. ஆனால் இந்தியா டி ஆஃப் ஸ்பின்னர் சரன்ஷ் ஜெயின் அற்புதமான ஒரு பந்து வீச்சில் மேலும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஒரு மினி அச்சுறுத்தல் ஏற்பட்டது. ஏற்கெனவே ருதுராஜ், சாய் சுதர்ஷன் விக்கெட்டுகளை ஜெயின் வீழ்த்தியிருந்தார்.

இந்த ஸ்பெல்லில் முதலில் இந்திய டெஸ்ட் வீரர் ரஜத் படிதாரை அவரது சொந்த எண்ணிக்கையான 44 ரன்களில் எல்.பி.செய்தார். ஆர்யன் ஜுயால் 47 ரன்களை எடுத்த நிலையில் அர்ஸ்தீப் சிங்கிடம் வெளியேற 88 ரன்கள் கூட்டணி இருவரது ஆட்டமிழப்பினாலும் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்ஸ் இந்தியா சி அணியின் அதிகபட்ச ஸ்கோரரான தமிழ்நாடின் பாபா இந்திரஜித் அடுத்தபடியாக சரன்ஷ் ஜெயினிடம் வீழ்ந்தார். ஹிருதிக் ஷோகீனை அக்சர் படேல் வீழ்த்தினார். அப்போதுதான் சுதர், அபிஷேக் போரல் இணைந்து மீதமிருந்த 42 ரன்களை சேதமின்றி எடுத்து இந்தியா சி-யின் வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த வெற்றி மூலம் இந்தியா சி அணிக்கு 6 புள்ளிகள் கிடைத்துள்ளது. செப்டம்பர் 12ம் தேதி முதல் இந்தியா சி அணி இந்தியா பி அணியுடனும் இந்தியா டி அணி இந்தியா ஏ அணியுடன்ம் மோதும். இந்த இரண்டு போட்டிகளுமே அனந்தபூரில் நடைபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE