காஞ்சிபுரம் டு பாரிஸ்: இடையூறுகளை தகர்த்தெறித்து தாயகத்துக்குப் பெருமை சேர்த்த துளசிமதி!

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: “மாற்றுத் திறனாளியான உனக்கு விளையாட்டெல்லாம் எதற்கு?” என்று அலட்சியமாக கேட்டவர்களை எல்லாம் வியக்க வைக்கும் விதமாக பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவி துளசிமதி.

காஞ்சிபுரம் - பழைய ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் துளசிமதி (24). இவர் கால்நடை மருத்துவ அறிவியல் பயின்று வருகிறார். கை பாதிக்கப்பட்ட துளசிமதி பேட்மிண்டனில் சிறுவயது முதலே ஆர்வம் கொண்டிருந்தார். இவரது தந்தை முருகேசன் விளையாட்டுக்கு பயிற்சி அளிப்பவர். தனது மகளுக்கு பேட்மிண்டன் ஆர்வம் இருப்பதை அறிந்து அதில் அவருக்கு பயிற்சி அளித்தார். பள்ளி படிப்பு முடியும் வரை அவரே மகளுக்கு பயிற்சியாளராக இருந்தார்.

பின்னர் சிறப்பு பயிற்சி தேவைப்பட்டதால் ஹைதராபாத் சென்று அங்கு பேட்மிண்டன் விளையாட்டில் முறையான பயிற்சி பெற்றார் துளசிமதி. அங்கு தமிழரான முகமது இர்பான் தான் இவருக்கு பயிற்சி அளித்துள்ளார். துளசிமதி ஏற்கெனவே பல்வேறு ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு சீனாவின் காங்சூ பகுதியில் நடந்த ஆசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றார்.

இதேபோல் இரட்டையர் விளைாட்டுப் போட்டி, ஒற்றையர் விளையாட்டு போட்டி என பேட்மிண்டனில் 15-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றுள்ளார். இம்முறை துளசிமதி பாரிஸில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பங்கேற்றார். இவர் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இது குறித்து துளசிமதியின் தந்தை முருகேசன் கூறுகையில் “துளசிமதி சிறுவயதில் இருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர். அவர் மாற்றுத் திறனாளியாக இருந்தும் அவருக்கு பயிற்சி அளித்தேன். பலர் இது வேண்டாத வேலை என்றே எங்களிடம் தெரிவித்தனர். ஆனால், அதையெல்லாம் மீறி அவருக்கு பயிற்சி அளித்தேன். பல்வேறு இடையூறுகளை தாண்டியே அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்தோம். அவரை இந்த இடத்துக்கு வர விடாமல் தடுக்க பல்வேறு இடையூறுகளைச் செய்தனர். நாங்கள் சாதாரண கூரை வீட்டில்தான் வசித்தோம். துளசிமதி இந்த நிலைக்கு வர ரொம்பவே சிரமப்பட்டுள்ளார்” என்றார்.

பாராலிம்பிக் வெற்றி குறித்து துளசிமதி கூறுகையில், “இந்தப் போட்டியில் சீனாவின் யங்கை வீழ்த்தி தங்கம் வெல்வது இலக்காக இருந்தது. இந்த முறை அது முடியாமல் போய்விட்டாலும் அடுத்த பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன். பாராலிம்பிக் மட்டுமல்ல, தொடர்ந்து நடைபெறும் ஆசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்ப்பதே எனது லட்சியம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்