இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்: பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் சாதனை!

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர்.

இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்தன. இந்த நிலையில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் சுமித் அன்டில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவுக்கான தங்கப் பதக்கம் 3 ஆக உயர்ந்துள்ளது. இன்று (செப்.02) இறுதிப் போட்டியில், இந்தியாவின் சுமித் 70.59 மீட்டர் நீளத்துக்கு எறிந்து தனது முந்தைய சாதனைகளை அவரே உடைத்துள்ளார்.

முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக்கில் 68.55 மீட்டர் என்ற சாதனையையும், அதன் பிறகு நடப்பு பாரிஸ் பாராலிம்பிக்கின் இன்றைய இறுதிப் போட்டியில் 70 மீட்டர் என்ற சாதனையையும் சுமித் படைத்திருந்தார்.சுமித்தின் 70.59 என்ற சாதனையை மற்ற நாட்டு போட்டியாளர்களால் முறியடிக்க முடியாத நிலையில், அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் இந்தியாவுக்கான தங்கப் பதக்கம் 3 ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE