பாரிஸ் பாராலிம்பிக்: பதக்கத்தை உறுதி செய்த துளசிமதி முருகேசன்

By செய்திப்பிரிவு

பாரிஸ்: நடப்பு பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் பாட்மிண்டனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் துளசிமதி முருகேசன். இதன் மூலம் பதக்கம் வெல்லும் வாய்ப்பை அவர் உறுதி செய்துள்ளார். அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், மகளிருக்கான எஸ்யு5 பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ் உடன் பலப்பரீட்சை மேற்கொண்டார். 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 23-21, 21-17 என அவர் வெற்றி பெற்றார். முதல் செட்டில் இருவரும் பலமான போட்டியை அளித்தனர். அதனால் ஆட்டம் மிகவும் சவாலானதாக இருந்தது.

இரண்டாவது செட்டில் மனிஷா 11-10 என முன்னிலை பெற்றார். இருந்தும் கேம் பிரேக்குக்கு பிறகு அவர் செய்த தவறுகளை பயன்படுத்தி ஆட்டத்தில் துளசிமதி வென்றார். இதன் மூலம் இறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்கு பாரிஸ் பாராலிம்பிக்கில் 8-வது பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இறுதிப் போட்டியில் யங் சூ சா உடன் துளசிமிதி விளையாடுகிறார். டோக்கியோ பாராலிம்பிக்கில் யங் சூ சா தங்கம் வென்றிருந்தார். இதே பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் மனிஷா விளையாட உள்ளார். இதுவரை பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் 27 வது இடத்தில் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE