சென்னை ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம்: கொச்சி அணி வீரர் ஹக் பார்ட்டர் முதலிடம்

By செய்திப்பிரிவு

சென்னை: இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் கொச்சி அணியைச் சேர்ந்த ஹக் பார்ட்டர் முதலிடம் பிடித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நேற்று முன்தினம் தீவுத்திடல் பகுதியில் பயிற்சி சுற்றுகளுடன் தொடங்கியது.

தெற்கு ஆசியாவில் முதன் முறையாக நடத்தப்படும் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயமாக இது அமைந்தது. இந்த பந்தயத்தின் பயிற்சியை நேற்றுமுன்தினம் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பயிற்சி நடைபெற்றது.

இந்நிலையில், பந்தயத்தின் கடைசி நாளான நேற்று பிரதானசுற்று நடைபெற்றது. இதில் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் இரு பந்தயமாக நடத்தப்பட்டது. இதில் பந்தயம் 1-ல் 16டிரைவர்கள் இடம் பெற்றிருந்தனர். ஹைதராபாத் பிளாக் பேர்ட்ஸ் அணியின் டிரைவர் அலிபாய் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பங்கேற்கவில்லை. பந்தயம் தொடங்கியதும் கார்கள் மின்னல் வேகத்தில் பறந்தன. சுமார் 240 கிலோ மீட்டருக்கு மேல் பறந்த கார்களை கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

பந்தயம் 1-ல் காட்ஸ்பீடு கொச்சி அணியைச் சேர்ந்த ஹக் பார்ட்டர் பந்தய தூரத்தை 19:50.952 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். பெங்கால் டைகர்ஸ் அணியின் ரூஹான் பந்தய தூரத்தை 19:50.251 விநாடிகளில் கடந்த 2-வது இடத்தையும், பெங்களூரு ஸ்பீடெஸ்டர்ஸ் அணியின் அபய் மோகன் 20:09.021 விநாடிகளில் இலக்கை அடைந்து 3-வது இடத்தையும் பிடித்தனர். சென்னை டர்போ ரைடர்ஸ் அணியை சேர்ந்த இஷாக் டிமெல்வீக் 20:11.408 விநாடிகளில் பந்தய தூரத்தை எட்டி 5-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

தெற்கு ஆசியாவில் முதல் முறையாக சென்னையில் ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற பந்தயத்தின்போது மின்விளக்குகளால் ஜொலித்த பந்தய சுற்றுப்பாதை.

ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் போட்டியுடன் இந்தியன் ரேசிங் லீக் போட்டியும், ஜேகே ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியும் நடத்தப்பட்டது. பிற்பகலில் தொடங்கி மின்னொளியில் இரவு 10.30 மணி வரை நடைபெற்ற இந்த பந்தயம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த பந்தயங்களை அணியின் உரிமையாளர்களான சவுரவ் கங்குலி, நாகசைதன்யா, அர்ஜுன் கபூர், ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE