T20 WC இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் குறித்து ஜான்ட்டி ரோட்ஸ் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டத்தை மாற்றிய தருணம் என்றால் அது சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச்தான் என ஜான்ட்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் கடைசி ஓவரின் முதல் பந்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லரை லாங் ஆஃப் திசையில் கேட்ச் பிடித்து அசத்தினார் சூர்யகுமார் யாதவ். அந்த கேட்ச் இந்திய அணிக்கு கோப்பையை உறுதி செய்தது. சூர்யகுமார் யாதவ் பவுண்டரி லைனை மிதித்தார் என்றும், மிதிக்கவில்லை என்றும் விவாதங்கள் இன்றும் எழுவதுண்டு.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்ட்டி ரோட்ஸ் தெரிவித்தது, “எனது அணி மற்றும் எதிர் அணி வீரர் என ஆட்டத்தை மாற்றும் திறன் கொண்ட எந்தவொரு வீரருக்கும் நான் எப்போதும் மதிப்பு கொடுப்பேன். டேவிட் மில்லர் பந்தை மைதானத்துக்கு வெளியில் அடித்திருக்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் கேட்ச் பிடிப்பது ஆட்டத்தின் முடிவை மாற்றும் என்பதை இது உறுதி செய்கிறது. உலகக் கோப்பை தொடரில் இந்தியா சிறந்து விளங்கியது. தென் ஆப்பிரிக்கா போராடியது.

இந்தப் போட்டியை பொறுத்தவரை எனக்கு கலவையான எமோஷன்கள் உண்டு. ஃபீல்டிங் பயிற்சியாளர் மற்றும் இந்தியாவுடன் பயணித்து வரும் எனக்கு இந்த முடிவு மகிழ்ச்சி தந்தது” என ஜான்ட்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE