துராந்த் கோப்பை | சாம்பியன் பட்டம் வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட் கால்பந்தாட்ட அணி!

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: நடப்பு துராந்த் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது நார்த்ஈஸ்ட் யுனைடெட் கால்பந்து கிளப் அணி. இதில் மோஹன் பகான் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி.

கடந்த ஜூலை 3-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரையில் துராந்த் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. குரூப் சுற்று மற்றும் நாக்-அவுட் சுற்று என 43 போட்டிகள் நடைபெற்றன. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தொடர் கடந்த 1888-ல் தொடங்கியது. ஆசியாவில் நடைபெறும் பழமையான கால்பந்து தொடராக அறியப்படுகிறது.

இந்த தொடரின் இறுதிப் போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் மற்றும் மோஹன் பகான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டி கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது மோஹன் பகான் அணி. இரண்டாவது பாதியில் 55 மற்றும் 58-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை பதிவு செய்து அசத்தியது நார்த்ஈஸ்ட். அதனால் ஆட்டம் 2-2 என சமன் ஆனது. அதன் பின்னர் இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை.

வெற்றியாளாரை தீர்மானிக்கும் வகையில் பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட். மோஹன் பகான் அணியின் லிஸ்டன் கோலாகோ மற்றும் சுபாசிஷ் போஸ் ஆகியோரின் பெனால்டி ஷூட்டை குர்மீத் மறுத்தார் நார்த்ஈஸ்ட் யுனைடெட் கோல் கீப்பர். அதன் மூலம் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE