காலீஸ் ஆடுவதைப் போலவே இருந்தது: கஸ் அட்கின்சன் சதத்தைப் பாராட்டிய ஜோ ரூட்

By ஆர்.முத்துக்குமார்

லார்ட்சில் நடைபெறும் இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் எடுத்த 427 ரன்களில், ஜோ ரூட் 143 ரன்களையும் கஸ் அட்கின்சன் 118 ரன்களையும் எடுக்க இங்கிலாந்து 427 ரன்களைக் குவித்தது.

இதில் கஸ் அட்கின்சன், அடிப்படையில் வேகப்பந்து வீச்சாளர். ஆனால் பேட்டிங்கில் இவரிடம் இப்படி ஒரு ஆட்டம் இருக்கும் என்று ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் இவர் வீறு கொண்டு 115 பந்துகளில் 14 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 118 ரன்களை விளாசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் முதல் தர கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 91 ரன்களைத்தான் எடுத்துள்ளார். எப்படி ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடும் பல ஷாட்கள் ஒரு விதத்தில் விவிஎஸ் லஷ்மண் ஆடும் ஷாட்களை நினைவுபடுத்துகிறதோ, கஸ் அட்கின்சன் பேட்டிங் பலருக்கும் ஜாக் காலீஸ் ஆடுவதை நினைவுபடுத்தியுள்ளது. அந்த நினைவில் சிக்கியவர்களில் ஜோ ரூட்டும் ஒருவர்.

கஸ் அட்கின்ஸன் பேட்டிங் பற்றி ஜோ ரூட் கூறும்போது, “ஆம்! நல்ல இன்னிங்ஸ். அருமையான இன்னிங்ஸ். நான் எதிர்முனையில் இருந்து கஸ் அட்கின்சன் பேட்டிங்கைத்தான் ரசித்துக் கொண்டிருந்தேன். அதுவும் கஸ் அடித்த நேர் சிக்சர்களை என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் மூழ்கினேன். அப்படியே ஜாக் காலீஸ் ஆடுவதைப் போலவே இருந்தது. கிரேட் இன்னிங்ஸ். நல்ல கூட்டணி அமைத்தோம். கஸ் அட்கின்சன் சதத்தினால் இப்போது டெஸ்ட்டில் நல்ல நிலைமையில் இருக்கிறோம்.” என்றார்.

99 ரன்களில் ஜோ ரூட் நீண்ட நேரம் செலவிட்டது பற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் பொய் சொல்லப் போவதில்லை. சதமெடுக்க வேண்டும் என்ற ஆவல் தான். முதலில் அந்த மைல்கல்லை எட்டி விட வேண்டும். பிறகு முக்கியமானவற்றில் என்னால் கவனம் செலுத்த முடிந்தது. அதாவது போட்டியில் வலுவான நிலையை எட்டுவது என்னும் முக்கியத்துவம் கவனம் பெற சதத்தை எடுத்து விட வேண்டும் என்று நினைத்தது உண்மைதான்” என்றார். ஜோ ரூட் 206 பந்துகளில் 143 ரன்கள் எடுத்தார். இதில் 18 பவுண்டரிகள் அடங்கும். இந்தச் சதத்தின் மூலம் லெஜண்ட் அலிஸ்டர் குக் எடுத்த 33 சதங்கள் என்ற சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார். மேலும் லார்ட்ஸில் 6வது சதம், இதில் கிரகாம் கூச் சாதனையை சமன் செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE