புச்சிபாபு தொடர்: மும்பை அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது டிஎன்சிஏ லெவன்

By செய்திப்பிரிவு

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் போட்டியில், டிஎன்சிஏ லெவன், மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோவை ராமகிருஷ்ணா கலை,அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டிஎன்சிஏ லெவன் அணி முதல் 379 ரன்களும், மும்பை அணி 156 ரன்களும் எடுத்தது. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய டிஎன்சிஏ லெவன் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 510 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. நேற்று முன்தினம் நடைபெற்ற 3-ம் நாள்ஆட்டத்தின்போது மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தைமும்பை அணி தொடர்ந்து விளையாடியது.

ஆனால் டிஎன்சிஏ லெவன் அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் மும்பை அணி 72.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது. இதையடுத்து டிஎன்சிஏ லெவன் அணி 286 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ஷம்ஸ் முலானி 68 ரன்களும், முஷீர் கான் 40 ரன்களும் எடுத்தனர். டிஎன்சிஏ லெவன் தரப்பில் சாய் கிஷோர், சி.வி. அச்யுத் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

சிறப்பாக பந்துவீசிய சாய்கிஷோர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியைத் தொடர்ந்து டிஎன்சிஏ லெவன் அணி அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

அரை இறுதி ஆட்டங்கள் செப்டம்பர் 2-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. திருநெல்வேலியில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன், ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. திண்டுக்கல் நத்தத்தில் நடைபெறும் மற்றொரு அரை இறுதிப் போட்டியில் டிஎன்சிஏ லெவன், சத்தீஸ்கர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE