இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் - இலங்கை அணி தடுமாற்றம்

By செய்திப்பிரிவு

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 427 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துடெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் அபாரமாக விளையாடி 143 ரன்கள் குவித்து வீழ்ந்தார்.

நேற்று நடைபெற்ற 2-ம் நாள் ஆட்டத்தை கஸ் அட்கின்சன் 74 ரன்களுடனும், மேத்யூ பாட்ஸ் 20 ரன்களுடனும் தொடங்கினர். தொடர்ந்து அபாரமாக விளையாடிய கஸ் அட்கின்சன் சதமடித்தார். அவர் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மேத்யூ பாட்ஸ் 21, ஆலி ஸ்டோன் 15, ஷோயிப் பஷீர் 7 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 427 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆட்டமிழந்தது. இலங்கை அணி தரப்பில் அசிதா பெர்னாண்டோ 5 விக்கெட்களை வீழ்த்தினார். மிலன் ரத்னாயகே, லஹிரு குமாராஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். பிரபாத் ஜெயசூர்யா ஒரு விக்கெட்டைச் சாய்த்தார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை இலங்கை அணி விளையாடத் தொடங்கியது. ஆனால் இங்கிலாந்து அணி வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

நிஷன் மதுஷ்கா 7, திமுத் கருணாரத்னே 7, பதும் நிசங்கா 12, ஏஞ்சலோ மேத்யூஸ் 22, தினேஷ் சண்டிமால் 23, தனஞ்ஜெயா டி சில்வா 0, மிலன் பிரியாநாத் ரத்னாயகே 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 36 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. கமிந்து மெண்டிஸ் 19 ரன்களும், பிரபாத் ஜெயசூர்யா 5 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ஆலி ஸ்டோன், மேத்யூ பாட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். கஸ் அட்கின்சன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE