பாராலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதல்: இந்திய வீராங்கனை அவனி லேகரா தங்கம் வென்று சாதனை!

By செய்திப்பிரிவு

பாரிஸ்: பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் தொடரின் துப்பாக்கிச் சூடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மற்றொரு வீராங்கனையான மோனா இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்திய வீராங்கனைகள் பாரிலிம்பிக்ஸில் இந்தியாவுக்கான பதக்க கணக்கை தொடங்கி வைத்தனர்.

பாராலிம்பிக்ஸில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய சார்பில் களம் கண்ட வீராங்கனைகள் அவனி லேகரா, மோனா அகர்வால் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை பெற்று வந்தனர். அவனி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த, மோனா சற்று பின்தங்கினார். இந்த இடைவெளியை பயன்படுத்திக்கொண்டார் தென் கொரிய வீராங்கனை லீ யுன்ரி.

இறுதியில், இந்திய வீராங்கனை அவனி லேகரா 249.7 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். 246.8 புள்ளிகளைப் பெற்று தென் கொரிய வீராங்கனை லீ வெள்ளி பதக்கம் வென்றார். 228.7 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின் மோனா அகர்வால் 3-வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் தங்கம் மற்றும் வெண்கலம் என இரண்டு பதக்கங்களுடன் இந்தியாவுக்கான பதக்க கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE