புச்சிபாபு கிரிக்கெட் தொடர் | குஜராத் அணிக்கு எதிராக அபார வெற்றி; அரை இறுதியில் டிஎன்சிஏ அணி

By செய்திப்பிரிவு

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் குஜராத் - டிஎன்சிஏ பிரெசிடண்ட் அணிகள் இடையிலான ஆட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் குஜராத் அணி 109.4 ஓவர்களில் 371 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்மீத் படேல் 144 ரன்கள் விளாசினார். இதையடுத்து பேட் செய்த டிஎன்சிஏ பிரெசிடண்ட் அணி 61.4 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது அலி 56, ஆந்த்ரே சித்தார்த் 55 ரன்கள் சேர்த்தனர்.

160 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய குஜராத் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 31 ஓவர்களில் 58 ரன்களுக்கு சுருண்டது. ஆதித்யா படேல் (18), ஜெய்மீத் படேல் (10), துர்ஷாந்த் சோனி (10) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன் சேர்த்தனர். டிஎன்சிஏ பிரெசிடண்ட் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் எம்.சித்தார்த் 8 விக்கெட்கள் வீழ்த்தினார். விக்னேஷ் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த டிஎன்சிஏ பிரெசிடண்ட் அணி 38.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆந்த்ரே சித்தார்த் 94 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 115 ரன்கள் விளாசினார். ராதாகிருஷ்ணன் 35, மாதவ பிரசாத் 32 ரன்கள் சேர்த்தனர். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டிஎன்சிஏ பிரெசிடண்ட் அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE