“லக்னோ அணியில் கே.எல்.ராகுல் ஓர் அங்கம்” - சஞ்சீவ் கோயங்கா உறுதி | IPL

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஃப்ரான்சைஸ் அணியில் கே.எல்.ராகுல் முக்கிய அங்கம் வகிக்கிறார் என அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார். இந்த சீசனின் மெகா ஏலத்துக்கு முன்பாக கே.எல்.ராகுல் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் 166 ரன்கள் இலக்கை வெறும் 58 பந்துகளில் எட்டியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அந்தப் போட்டி முடிந்ததும் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலிடம் களத்திலேயே விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார் சஞ்சீவ் கோயங்கா. அது அப்போது மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கே.எல்.ராகுல், சஞ்சீவ் கோயங்காவை கொல்கத்தாவில் சந்தித்திருந்தார். அப்போது லக்னோ அணியில் இருக்க விரும்புவதாக அவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனை முன்னிட்டு இந்த ஆண்டு இறுதியில் மெகா ஏலம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஐபிஎல் அணியும் எந்த வீரரை தக்க வைக்கலாம், யார் யாரை விடுவிக்கலாம் என தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

“நான் கடந்த மூன்று ஆண்டுகளாக கே.எல்.ராகுலை சந்தித்து வருகிறது. ஆனால், அண்மையில் நடைபெற்ற எங்களது சந்திப்பு அதீத கவனத்தை பெற்றுள்ளது. அது எனக்கே சர்ப்ரைஸ் தந்தது. அணியில் யாரை தக்க வைக்கலாம் என நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனாலும் லக்னோ அணியின் தொடக்கம் முதலே அதன் முக்கிய அங்கமாக கே.எல்.ராகுல் விளங்கி வருகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு இதில் முக்கிய பங்கு உள்ளது.

எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர் அவர். அடுத்த சீசன் குறித்து முடிவு எடுக்க நாட்கள் உள்ளது. அணியின் பயிற்சியாளர்களில் எந்தவித மாற்றமும் இருக்காது. ஐபிஎல் நிர்வாக குழுவின் விதிகள் என்ன சொல்கின்றனவோ அதற்கேற்ற வகையில் வீரர்களை தக்க வைப்போம்” என சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE