தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: இறுதிக்கட்ட தொடர் இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் ‘பள்ளிகள் ஹாக்கிலீக்’ தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 3 கட்டங்களை உள்ளடக்கிய இந்த தொடரின் முதல் கட்டத்தில் 38 மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் இருந்து 38 அணிகள் தேர்வு செய்யப்பட்டு 2-வது கட்டமாக மண்டல அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த தொடரில் இருந்து வெற்றி பெற்ற அணி மற்றும் 6 மண்டல அணிகளில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட அணி என மொத்தம் 12 அணிகளை உருவாக்கி 3-வது கட்டமான மாநில அளவிலான போட்டி நடத்தப்பட உள்ளது.

இந்த மாநில அளவிலான போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் இன்று (ஆக.29-ம் தேதி) தொடங்குகிறது. 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான தொடராக இது நடத்தப்படுகிறது. செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பை மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் 12 அணிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று எழும்பூர் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சாய்ராம் கல்லூரியின் தலைவர் பிரகாஷ் லியோ முத்து, தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE