லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஆனார் ஜாகீர் கான்!

By ஆர்.முத்துக்குமார்

புது டெல்லி: இந்திய அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜாகீர் கான், இப்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

தற்போதைய இந்திய அணி தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விட்டுச் சென்ற இடத்திற்கு ஜாகீர் கான் இப்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக மோர்னி மோர்கெலை நியமித்தது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. ஆயுள் தோறும் இந்தியாவின் மயானப் பிட்சில் வேகப்பந்து வீசி 300க்கும் அதிகமான டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாகீர் கானை விட மோர்னி மோர்கெல் எப்படி பொருத்தமாக இருப்பார் என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

2018 முதல் 2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் இயக்குநராக இருந்தார் ஜாகீர் கான். பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் உலகத் தலைமைப் பொறுப்பை ஏற்றார். என்ன ஒரு நகை முரண் என்றால், இந்திய பவுலிங் கோச் ஆக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜாகீர் கான் முன்பு லக்னோ பவுலிங் பயிற்சியாளராக இருந்த மோர்னி மோர்கெலுக்குப் பதில் இப்போது ஆலோசகர் பொறுப்பை ஏற்றுள்ளார். ஆனால் உண்மையில் பவுலிங் பயிற்சியாளராகவும் ஜாகீர் கான் இருப்பார்.

ஜாகீர் கான் சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 610 விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர். 2011 உலகக்கோப்பை வெற்றியில் பெரும்பங்கு வகித்தவர். இவர் ஏற்கெனவே ஆர்சிபி, மும்பை இண்டியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளில் ஐபிஎல் தொடரில் ஆடியுள்ளார்.

10 ஐபிஎல் தொடர்களில் ஜாகீர் கான் 102 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சிக்கன விகிதம் 7.58. 2017-ல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ஆடியதுதான் ஜாகீர் கானின் கடைசி ஐபிஎல் தொடர் ஆகும். அப்போது அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு அறிவித்தார். லக்னோ அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். சப்போர்ட் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்கா முன்னாள் ஆல்ரவுண்டர் லான்ஸ் குளூஸ்னரும், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆடம் வோஜஸும் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE