“இறுதிக்கட்ட தடையை உடைத்து கோப்பையை வெல்வோம்” - கேப்டன் ஹர்மன்பிரீத் நம்பிக்கை @ WT20 WC

By செய்திப்பிரிவு

மும்பை: எதிர்வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

“ஐசிசி உலகக் கோப்பை தொடர்களில் நாங்கள் விளையாடும் போதெல்லாம், சிறப்பாக செயல்பட விரும்புகிறோம். கடந்த காலங்களிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளோம். இந்த முறை இறுதிக்கட்ட தடையை உடைத்து கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறோம்.

நாங்கள் அமீரகத்தில் அதிகம் விளையாடியது இல்லை. ஆனால், அங்கு இருக்கும் கள சூழல் இந்தியாவில் இருப்பதை போலவே இருக்கும் என நம்புகிறோம். அதற்கு ஏற்ப எங்களது ஆட்டம் இருக்கும். ஒரு அணியாக கடந்த கால தோல்வியில் இருந்து நாங்கள் பாடம் கற்றுள்ளோம். இந்த உலகக் கோப்பையில் அனைத்து பாக்ஸுகளையும் டிக் செய்வோம் என நம்புகிறேன்” என ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்தார்.

9-வது ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 8 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா ஒரே ஒரு முறை மட்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. 2020-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது.

இம்முறை இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிளும் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE