களத்தில் சரிந்து விழுந்த உருகுவே கால்பந்து வீரர்: மருத்துவமனையில் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

சாவ் பாலோ: உருகுவே கால்பந்து வீரர் ஜுவான் இஸ்கியர்டோ (Juan Izquierdo), பிரேசில் நாட்டின் சாவ் பாலோவில் போட்டியில் விளையாடி கொண்டிருந்த போது நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். தொடர்ந்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

27 வயதான அவர், தடுப்பாட்ட வீரர். அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தான் அவருக்கு மகன் பிறந்தார்.

செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் நேரப்படி இரவு 9.38 மணிக்கு கார்டியோஸ்பிரேட்டரி அரெஸ்ட் (இதயம் சார்ந்த பாதிப்பு) காரணமாக உயிரிழந்தார் என அவருக்கு சிகிச்சை அளித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 22-ம் தேதி சாவ் பாலோவில் உள்ள மைதானத்தில் கிளப் அளவிலான ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது நிலைகுலைந்து சரிந்து விழுந்த அவர் மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவர் நலமுடன் மீண்டு வர வேண்டும் என அவரது குடும்பத்தினர், நேஷனல் கிளப் அணியினர், சக நாட்டு வீரர்கள், கால்பந்து ஆர்வலர்கள் என அனைவரும் பிரார்த்தனை செய்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு, லூயிஸ் சுவாரஸ் மற்றும் உருகுவே நாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே மைதானத்தில் பிரேசில் நாட்டில் லீக் போட்டியில் விளையாடிய செர்ஜின்ஹோ என்ற வீரர் களத்தில் விளையாடிய போது நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். சில மணி நேர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிரிழந்தார். அதன் பின்னர் பிரேசில் நாட்டில் உள்ள மைதானங்களில் டிஃபிப்ரிலேட்டர்கள் அனுமதிக்கப்பட்டன. அதற்காக சுகாதார நெறிமுறைகள் மாற்றப்பட்டன. இந்நிலையில், இஸ்கியர்டோ சரிந்து விழுந்த போது அவருக்கு டிஃபிப்ரிலேட்டர் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE