ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு! 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இளம் வயதிலேயே ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

ஐசிசியின் தற்போதைய தலைவராக இருக்கும் கிரேக் பார்க்லேவின் பதவிக் காலம் வரும் நவம்பருடன் முடிகிறது. ஏற்கெனவே 2 முறை பொறுப்பு வகித்த அவர் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். இதனையடுத்து, ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 27-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்கலாம் என்று ஐசிசி நிர்வாகம் அறிவித்தது. அதன்படி வேட்பு மனுக்களை அளிக்க கடைசி நாளான இன்று ஜெய் ஷாவுக்கு போட்டியாக யாரும் வேட்புமனுக்களை அளிக்காததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் இளம் வயதிலேயே ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு தற்போது 35 வயது. ஏற்கெனவே இந்தியாவில் இருந்து ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன், சுஷாங்க் மனோகர் ஆகியோர் ஐசிசி தலைவராக பதவி வகித்துள்ள நிலையில், ஜெய் ஷா இந்தியாவைச் சேர்ந்த ஐந்தாவது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் 1-ம் தேதி அவர் தலைவராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த பிசிசிஐ செயலாளர் யார்? - இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு முதல் பிசிசிஐ செயலாளராக செயல்பட்டு வருகிறார் ஜெய் ஷா. அவர் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றால், அடுத்த பிசிசிஐ செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி, தற்போது பிசிசிஐ துணை தலைவராக இருக்கும் ராஜுவ் சுக்லா, பிசிசிஐ பொருளாளர் ஆஷிஷ் ஷெலர், ஐபிஎல் தலைவர் அருண் துமால் ஆகியோரில் ஒருவர் ஜெய் ஷாவின் பிசிசிஐ செயலாளருக்கான இடத்தை நிரப்பலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE