‘நான் யாரிடமும் அதை சொல்லமாட்டேன்’ - ஓய்வு குறித்து ரொனால்டோ ஓபன் டாக்!

By செய்திப்பிரிவு

லிஸ்பன்: கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது எதிர்கால திட்டம் குறித்து பேசியுள்ளார். இப்போதைக்கு தன் நாட்டுக்காக விளையாட விரும்பும் அவர், ஓய்வு குறித்த முடிவை யாரிடமும் சொல்லமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போர்ச்சுகல் நாட்டு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் தெரிவித்தது. “தேசிய அணியை விட்டு வெளியேறும் போது அது குறித்து யாரிடமும் முன்கூட்டியே நான் சொல்ல மாட்டேன். அது முழுவதும் தன்னிச்சையான முடிவாக இருக்கும். அது குறித்து பில்ட்-அப் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. ஓய்வு குறித்த முடிவை ஆழமாக யோசித்து எடுப்பேன்.

இப்போதைக்கு எதிர்வரும் போட்டிகளில் போர்ச்சுகல் அணிக்காக உதவ விரும்புகிறேன். அடுத்ததாக நாங்கள் நேஷனல் லீக் தொடரில் விளையாட உள்ளோம். அதில் விளையாட நான் ஆர்வமாக உள்ளேன். அதே போல ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளர் ஆகும் திட்டம் எல்லாம் என்னிடம் இல்லை. கால்பந்துக்கு வெளியில் இயங்க விரும்புகிறேன். ஆனாலும் எதிர்காலம் என்ன என்பதை கடவுள் மட்டுமே அறிவார்” என ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

வரும் செப்டம்பர் 5-ம் தேதி அன்று நேஷனல் லீக் தொடரில் குரோஷியா அணியுடன் போர்ச்சுகல் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது. சர்வதேச கால்பந்தாட்ட களத்தில் அதிக கோல்கள் பதிவு செய்தவர் என்று சாதனைக்கு ரொனால்டோ சொந்தக்காரர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE