2-வது டி20-ல் 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி: தொடரை கைப்பற்றியது மே.இ.தீவுகள்

By செய்திப்பிரிவு

டிரினிடாட்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.

டிரினிடாட்டில் நேற்று நடைபெற்ற 2-வது டி 20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 22 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் விளாசினார். கேப்டன் ரோவ்மன் பவல் 35, அலிக் அத்தனாஸ் 28, ஷெர்ஃபேன் ரூதர்போர்டு 29, நிகோலஸ் பூரன் 19 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லிஸாத் வில்லியம்ஸ் 3, பாட்ரிக் க்ரூகர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

180 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 18 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 28, ரியான் ரிக்கெல்டன் 20, கேப்டன் எய்டன் மார்க்ரம் 19, ராஸி வான் டெர் டஸ்ஸன் 17 ரன்கள் சேர்த்தனர்.

முதல் 4 ஓவர்களில் 57 ரன்களை விளாசிய தென் ஆப்பிரிக்க அணி ஒரு கட்டத்தில் 13.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் மேற்கொண்டு 20 ரன்கள் சேர்ப்பதற்குள் எஞ்சிய 7 விக்கெட்களையும் தாரை வார்த்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஷமர் ஜோசப், ரொமரியோ ஷெப்பர்டு ஆகியோர் அபாரமாக பந்து வீசி தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

அகீல் ஹோசைன் 2 விக்கெட்களை கைப்பற்றினார். 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்டடி 20 கிரிக்கெட் தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது டி 20 ஆட்டம் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE