PAK vs BAN முதல் டெஸ்ட் | 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி!

By செய்திப்பிரிவு

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது வங்கதேசம்.

பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசியது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. சைம் அயூப் 56, ரிஸ்வான் 171, சவுத் ஷகீல் 141 ரன்கள் எடுத்திருந்தனர்.

இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 562 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷத்மான் இஸ்லாம் 93 ரன்கள் எடுத்தார். மொமினுல் ஹக் 50 ரன்கள் எடுத்தார். லிட்டன் தாஸ் 56 மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் 77 ரன்கள் எடுத்தனர். அபாரமாக ஆடிய முஷ்பிகுர் ரஹீம் 341 பந்துகளில், ஒரு சிக்ஸர், 22 பவுண்டரிகளுடன் 191 ரன்கள் எடுத்திருந்தார். முதல் இன்னிங்ஸில் 117 ரன்கள் முன்னிலை பெற்றது வங்கதேசம்.

இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

வங்கதேச அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். அதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4 மற்றும் ஷகிப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இரண்டாவது இன்னிங்ஸில் விரட்டியது வங்கதேசம். 6.3 ஓவர்களில் அதனை எட்டி வங்கதேசம் வரலாறு படைத்தது. ஆட்ட நாயகன் விருதை முஷ்பிகுர் ரஹீம் பெற்றார்.

முதல் வெற்றி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது வங்கதேசம். இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியுடன் வங்கதேசம் விளையாடி உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக 12 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியை சமனும் செய்திருந்தது வங்கதேசம். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச அணி 10 விக்கெட்டுகளில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. அதேபோல சொந்த மண்ணில் 10 விக்கெட்டுகளில் ஆட்டத்தை பாகிஸ்தான் இழப்பதும் இதுவே முதல் முறை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE