‘ஆல்-டைம் இந்திய லெவன் மட்டுமல்ல, உலக லெவனிலும் தோனி இருப்பார்’ - தினேஷ் கார்த்திக்

By செய்திப்பிரிவு

சென்னை: தனது ஆல்-டைம் சிறந்த இந்திய பிளேயிங் லெவன் அணியில் தோனி இடம்பெறாதது பெரிய தவறு என இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

78-வது சுதந்திர தின விழா அன்று தனது ஆல்-டைம் சிறந்த இந்திய வீரர்கள் அடங்கிய இந்திய லெவன் அணியை தினேஷ் கார்த்திக் வெளியிட்டிருந்தார். அவரது அணியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இடம்பெறவில்லை. மேலும், அந்த அணியில் விக்கெட் கீப்பரும் இல்லை.

இந்நிலையில், அது தோனியின் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்களை அதிர்ச்சி கொள்ள செய்தது. அது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், தற்போது அது தொடர்பாக தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

“நான் அணியை தேர்வு செய்த போது விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய மறந்துவிட்டேன். ராகுல் திராவிட் அணியில் இருந்தார். அதனால் அவர் அந்த பணியை கவனிப்பார் என நான் எண்ணியதாக ரசிகர்கள் கருதினர். ஒரு விக்கெட் கீப்பரான நானே அதை மிஸ் செய்துள்ளேன். அது தவறு.

தோனிக்கு எந்தவொரு அணியிலும் நிச்சயம் இடம் இருக்கும். அவர் கிரிக்கெட் விளையாட்டின் தலைசிறந்த வீரர். நான் எனது அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்ய வேண்டுமென்றால் 7-ம் இடத்தில் தோனி இருப்பார். எந்தவொரு இந்திய அணியாக இருந்தாலும் அவர்தான் கேப்டன்” என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த ஆல்-டைம் இந்திய லெவனில் இடம் பிடித்த வீரர்கள்: சேவாக், ரோகித் சர்மா, ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE