8 அணிகள் கலந்து கொள்ளும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது

By பெ.மாரிமுத்து

சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் 5-வது சீசன் போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ், ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் ஆகிய இரு அணிகள் புதிதாக களமிறங்க உள்ளன. இவற்றுடன் நடப்பு சாம்பியனான கோவா சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி டிடிசி, யு மும்பா டிடி, புனேரி பல்தான், பிபிஜி பெங்களூரு ஸ்மாஷர்ஸ் ஆகிய அணிகளும் பட்டம் வெல்ல மோதுகின்றன.

இந்த 8 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெறுகின்றன. ஒரு அணி தனது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். மேலும் எதிர் பிரிவில் உள்ள ஏதேனும் இரு அணிகளுடன் தலா ஒரு முறை பலப்பரீட்சை நடத்தும். இந்த வகையில் ஒவ்வொரு அணியும் 5 மோதலில் விளையாடும். லீக் சுற்றில் மொத்தம் 20 மோதல்கள் இடம் பெறுகின்றன.

ஒவ்வொரு மோதலும் ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர், கலப்பு இரட்டையர், ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் என 5 ஆட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். ஒவ்வொரு ஆட்டமும் 3 செட்களை (கேம்கள்) கொண்டதாக இருக்கும். இதில் எட்டு கேம்களை கைப்பற்றும் அணி வெற்றி பெறும். அதே நேரத்தில் ஒவ்வொரு கேமும் ஒரு புள்ளியாக கணக்கிடப்படுகிறது. லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

தொடக்க நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கோவா சாலஞ்சர்ஸ் - ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. கோவா அணி ஹர்மீத் தேசாய் தலைமையிலும், ஜெய்ப்பூர் அணி ஸ்நேகித் தலைமையிலும் களமிறங்குகிறது.

17 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 16 சர்வதேச வீரர்கள் உட்பட மொத்தம் 48 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

சரத் கமல் தலைமையிலான சென்னை லயன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை (23-ம் தேதி), பிபிஜி பெங்களூரு ஸ்மாஷர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE