இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிரீன், மிட்செல் மார்ஷை பந்து வீச்சில் அதிகளவில் பயன்படுத்துவோம்: ஆஸி. கேப்டன் கம்மின்ஸ்

By செய்திப்பிரிவு

மெல்பர்ன்: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட்கிரிக்கெட் தொடரில் ஆல்ரவுண்டர்களான கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகியோரை பந்து வீச்சில் அதிக அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக நடைபெற்ற இரு தொடர்களையும் இந்திய அணி வென்று சாதனை படைத்திருந்தது. இதனால் இம்முறையும் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் ஆல்ரவுண்டர்களான கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகியோரை பந்து வீச்சில் அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

டெஸ்ட் அணியில் ஆல்ரவுண்டர்கள் இருப்பது மிகப்பெரிய பலம். ஆனால் சில நேரங்களில் அவர்களை, நினைத்த அளவுக்கு பயன்படுத்த முடிவதில்லை. கடந்த இருகோடைகால டெஸ்ட் தொடர்களும்இலகுவானதாக இருந்தன.ஆனால் இந்த முறை நடைபெறவுள்ள கோடை கால டெஸ்ட் தொடர்சற்று வித்தியாசமாக இருக்கும்.

ஆல்ரவுண்டர்களான கேமரூன் கிரீன் மற்றும் மிட்செல் மார்ஷை அதிக அளவில் பந்துவீச்சில் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். அடிப்படையில் கேமரூன் கிரீன், ஷீல்டு கிரிக்கெட்டில் பந்து வீச்சாளராகவே அறிமுகமானார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர், பெரிய அளவில் பந்து வீசுவதற்கான அவசியம் ஏற்படவில்லை. தற்போது அவர், சில ஆண்டுகள் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளார்.

நேதன் லயன் ஏராளமான ஓவர்களை வீசுவதும் எங்களுக்கு அதிர்ஷ்டம். இதனாலேயே ஆல்ரவுண்டரின் முழுமையான பணி அவசியம் இல்லாமல் இருக்கிறது. ஆனால் பந்து வீச்சில் ஐந்தாவதாக ஒரு தேர்வு இருப்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் ஆகியோரால் எங்களுக்கு பந்து வீச்சில் 6 தேர்வுகள் உள்ளன. இது மிகவும் நல்ல விஷயம். மேலும் பேட்டிங்கில் முதல் 6 நிலைகளில் களமிறங்குபவர்கள் அணியை கட்டமைக்க வேண்டும். இவ்வாறு பாட் கம்மின்ஸ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE