ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவாரா? - பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதில்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கவில்லை.

கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதில் இருந்து குணமடைந்து வருகிறார். காயங்களுக்கு பிந்தைய சிகிச்சையை அவர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமில் பெற்று வருகிறார். முழு உடற்தகுதியை எட்டுவதற்கான இறுதிக்கட்ட நிலையில் ஷமி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அவர், வரும் செப்டம்பர் 19-ம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக தொடங்கும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் அதைத் தொடர்ந்து நவம்பரில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் பங்கேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தகுந்தவாறு தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடந்த ஒரு மாதமாக ஷமி பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவரது பணிச்சுமை சீராக அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அவர், எந்தவித வலிகளையும் உணரவில்லை. இதனால் ஷமி விரைவிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறும்போது, “முகமது ஷமி ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவாரா இல்லையா என்பது அவரது உடற்தகுதி மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி வழங்கும் அறிக்கைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE