ஆல்ரவுண்டராக தீப்தி சர்மா அசத்தல்: தி ஹண்ட்ரட் கிரிக்கெட்டில் லண்டன் அணி சாம்பியன்

By செய்திப்பிரிவு

லண்டன்: மகளிருக்கான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவின் தீப்தி சர்மா ஆல்ரவுண்டராக அணியின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினார்.

மகளிருக்கான தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் இரவு லண்டனில் நடைபெற்றது. இதில் லண்டன் ஸ்பிரிட் - வெல்ஷ் ஃபயர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வெல்ஷ் ஃபயர் அணி 100 பந்துகளில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஜெஸ் ஜோனாசன் 41 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசினார். ஹேலி மேத்யூஸ் 22, கேப்டன் டாமி பியூமான்ட் 21 ரன்கள் சேர்த்தனர். லண்டன் ஸ்பிரிட் அணி தரப்பில் இவா கிரே, சாரா கிளென் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இந்தியாவின் தீப்தி சர்மா 20 பந்துகளை வீசி 23 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

116 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லண்டன் ஸ்பிரிட் அணி 98 பந்துகளில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ஜோர்ஜியா ரெட்மெய்ன் 34, ஹீதர் நைட் 24, டேனியல் கிப்சன் 22 ரன்கள் சேர்த்தனர். இறுதிக்கட்டத்தில் தீப்தி சர்மா 16 பந்துகளில், ஒரு சிக்ஸருடன் 16 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE