நம்பிக்கையே வாழ்க்கை: 303 ரன்களை ஒரே இன்னிங்ஸில் விளாசியும் ஒதுக்கப்பட்ட கருண் நாயர் மனம் திறப்பு

By ஆர்.முத்துக்குமார்

2016-ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு நட்சத்திரம் உதயமானார் என்றே அன்று ரசிகர்கள் நம்பினர். காரணம், கருண் நாயர் இங்கிலாந்துக்கு எதிராக 303 ரன்களை 381 பந்துகளில் 32 பவுண்டரிகள் 4 சிக்சர்க்ளுடன் 303 நாட் அவுட் ஆக இந்திய அணி 759 ரன்களைக் குவிக்க இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இவர் விளையாடியது மொத்தம் 6 போட்டிகளே. இதில் 374 ரன்கள். 62.33 சராசரி. அதன் பிறகு 26, 0, 23, 5 என்ற ஸ்கோருடன் இவரது டெஸ்ட் வாழக்கை முடித்து வைக்கப்பட்டது. 62 ரன்கள் சராசரி உள்ள ஒரு வீரருக்கு அதன் பிறகு, அதாவது 2017-ல் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடித்து வைக்கப்பட்டது. இப்போது இவருக்கு வயது 32. போட்டிகள் அதிகமான இந்திய அணியில் இப்போதும் தான் நுழைய முடியும் என்று நம்புகிறார். நம்பிக்கைதான் வாழ்க்கை.

கடந்த ரஞ்சி சீசனில் விதர்பா அணிக்காக 690 ரன்களை எடுத்தார். இறுதி வரை வந்த விதர்பா மும்பையிடம் இறுதியில் தோற்றது. சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 இறுதிப் போட்டியில் பெங்காலுக்கு எதிராக 52 பந்துகளில் 95 ரன்களை விளாசினார். அதிக ரன்களை சேஸிங் செய்த சாதனையையும் விதர்பா நிகழ்த்தியது. இதோடு விஜய் ஹசாரே டிராபியில் ஒரு சதமும் அரைசதமும் எடுத்தார் கருண் நாயர். நார்த்தாம்ப்டன் ஷயர் அணிக்காக 11 இன்னிங்ஸ்களில் 487 ரன்களை எடுத்தார். குளிர் மிகுந்த இங்கிலாந்து கண்டிஷனில் இவர் ஆடியது பெரிய பாராட்டுகளை ஈர்த்தது. இதில் ஒரு 202 நாட் அவுட் இன்னிங்சும் அடங்கும்.

“மிகவும் கடினம். பேட்டைப் பிடிக்கக் கூட கஷ்டமான குளிர். உடல் முழுக்க குளிர் பாதுகாப்பு ஆடை மயம். ஆனால் அந்த கடினமான கண்டிஷனில் ஆடி ரன்கள் எடுக்க முடிந்தது எனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்த தருணம். அத்தகைய பிட்சுகளில் அந்த வானிலையில் ரன்கள் எடுப்பதைப் போன்ற நம்பிக்கையூட்டும் தருணம் வேறொன்றும் இருக்க முடியாது. இங்கிலாந்தில் ரன்கள் எடுக்க முடிந்தது. அதுவும் குளிரில் பந்துகள் தாறுமாறாக ஸ்விங் ஆன தருணத்தில் பேட்டிங்கில் வெற்றி அடைவது சாதாரணமல்ல.

நான் எப்போதையும் விட இப்போது மிக நன்றாக பேட் செய்கிறேன். வாய்ப்புகள் கிடைத்தால் மீண்டும் ஒரு லாங் இன்னிங்ஸ் ஆடலாம். ஒவ்வொரு நாளும் மீண்டும் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் கனவுடன் தான் விழிக்கிறேன். இந்த உத்வேகம் தான் என்னை நகர்த்துகிறது. மீண்டும் டெஸ்ட் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன். கோப்பைகளை வெல்வது எனக்குப் பிடிக்கும், கடந்த ஆண்டு ரஞ்சி இறுதியில் தோற்றோம். இந்த முறை அதைச் சரிசெய்வோம்” என்கிறார் கருண் நாயர்.

62 ரன்கள் சராசரி. வெளியே அனுப்பப்படுவதற்கு 4 இன்னிங்ஸ்களுக்கு முன்பாகத்தான் முச்சதம். வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்படாமல் ஒழிக்கப்பட்டதற்கு இந்திய அணி தேர்வுக்குழு, விராட் கோலி, ரவிசாஸ்திரி அத்தனை பேரும் தான் பொறுப்பு. இன்று மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய வேண்டும் என்கிற அவரது ஆசை நிராசையாகத்தான் போகும். ஆனால் அந்த ஒரு ஊக்கம் அவரை இன்று வரை அர்ப்பணிப்புடன் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடவைக்கிறதே அதுதான் நம்பிக்கை. வாழ்க்கையின் மீதான நம்பிக்கை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE