ராகுல் 94 ரன் வீண்: அஸ்வினின் கேள்விக்குரிய கேப்டன்சியில் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த மும்பை

By இரா.முத்துக்குமார்

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் 50வது போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் தனிப்பட்ட முயற்சி வீணாக கிங்ஸ் லெவன் அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.

இதன் மூலம் ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது, அடுத்த போட்டியையும் கிங்ஸ் லெவன் தோற்றால் இதுவும் 12 புள்ளிகளுடன் மற்ற அணிகளுடன் கும்மியடிக்க வேண்டியதுதான், ஆனால் பிளே ஆஃப் வாய்ப்பு மும்பை இந்தியன்ஸுக்கே செல்லும். அதைத்தான் சில கேள்விக்குரிய கேப்டன்சியில் அஸ்வின் தலைமை கிங்ஸ் லெவன் பஞ்சாப் செய்தது.

டாஸ் வென்று முதலில் மும்பையை பேட் செய்ய அழைத்தார் அஸ்வின் அந்த அணி 59/3, 71/4 என்ற நிலையிலிருந்து பொலார்ட் அரைசதம் குருணால் பாண்டியாவின் 32 ரன்களினால் 186/8 என்ற ஸ்கோரை எட்டியது. தொடர்ந்து ஆடிய கிங்ஸ் லெவன் அணியில் கே.எல்.ராகுல் (94), ஏரோன் பிஞ்ச் (46) இணைந்து 2வது விக்கெட்டுக்கு 111 ரன்களைச் சேர்த்த போது 16 ஓவர்களில் 145 ரன்கள் என்று வெற்றிபெறும் நிலையில்தான் இருந்தது. ஆனால் அப்போது ஜஸ்ப்ரித் பூம் பூம் பும்ரா பிஞ்ச், ஸ்டாய்னிஸ், ராகுல் ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்ற கிங்ஸ் லெவன் 183/5 என்று பரபரப்பான ஆட்டத்தை ஆடி கடைசியில் தோல்வியில் முடிந்தது. ஆட்ட நாயகன் பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்களுக்கு 3 விக்கெட்.

பொலார்ட் அதிரடித் திருப்பு முனையும் அஸ்வினின் புரியாத புதிர் முடிவும்:

மும்பை பேட் செய்யத் தொடங்கிய போது அதிக ரன்களை இலக்காக வைக்க வேண்டும் என்ற அவசரம் தெரிந்தது, எவின் லூயிஸ் 9 ரன்களில் பவுல்டு ஆனார்.

சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் ரன் விகிதத்தை உயர்த்தினர். 3வது ஓவரிலேயே சூரியகுமார் யாதவ் மட்டைத்தாண்டவம் நடத்தினார் அங்கிட் ராஜ்புத் வீசிய ஓவரைப் புரட்டி எடுத்தார். 2 ஆப் திசை, 2 லெக் திசை ஷாட்கலில் 2 நான்குகள் 2 ஆறுகள் என்று 21 ரன்களை விளாசினார் சூர்யா.

மோஹித் சர்மா வீசிய 5-வது ஓவரை இம்முறை இஷான் கிஷன் அதிர்ஷ்டகரமான எட்ஜ் பவுண்டரிக்குப் பிறகு மோஹித்தின் ஆமை வேகப்பந்து இரண்டு சிக்சர்களுக்குப் பறந்தது. 18 ரன்கள் இந்த ஓவரில் வர 5 ஓவர்களில் 57/1 என்று பறந்தது மும்பை இந்தியன்ஸ்.

அப்போதுதான் ஆண்ட்ரூ டை வீச வந்தார் மிக அருமையான அந்த ஓவரில் மும்பைக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. விரலிடுக்கு பந்தை வீச இஷான் கிஷன் மிட் ஆனில் கேட்ச் கொடுத்தார். 20 ரன்னில் இஷான் கிஷன் நடைகட்டினார், அடுத்த பந்தே மீண்டும் விரலிடுக்கிலிருந்து பந்தை வெளியேற்ற சூர்ய குமார் யாதவ் பேட்டின் அடிவிளிம்பில் பட்டு ராகுலிடம் கேட்ச் ஆனது. பவர் பிளே முடிவில் 60/3 என்று மும்பை இந்தியன்ஸ் திணறியது.

ரோஹித் சர்மா, குருணால் பாண்டியா களத்தில் இருந்தனர். அக்சர் படேல், அஸ்வின் வீச வந்தனர். அக்சர் ஒரு ஓவரில் 6 ரன்களையும், அஸ்வின் ஒரு ஓவரில் 5 ரன்களையும் கொடுத்தனர். அடுத்த ஓவரில் ராஜ்புத் ரோஹித்சர்மாவை வீட்டுக்கு அனுப்பினார், யுவராஜ் கேட்சுக்கு எந்தவித கொண்டாட்டமும் இல்லை.

பொலார்டும் குருணாலும் இணைந்தனர், அப்போது அஸ்வின் மீண்டும் பந்து வீச வரவேயில்லை, ஒரு ஓவரில் 5 ரன் கொடுத்தவர், களத்தில் இடது கை வீரர் குருணால் நின்ற போதும் பந்து வீச வரவில்லை, இது ஏன்? என்பது புரியாத புதிர். ஐபிஎல் தர்க்கங்களில் ஒன்று. நமக்குத்தான் புரியாது, அவர்களுக்குப் புரியும். இந்தப் பிட்சில் ஸ்பின் தான் வீசியிருக்க வேண்டும், ஏனெனில் பேட்ஸ்மென்கள் வேகப்பந்தை விரும்புகின்றனர்.

ஒன்று அஸ்வின் மிடில் ஓவரில் குருணால், பொலார்டுக்கு வீசியிருந்தால் அவர்கள் இவர் ஓவரை அடிக்காமல் நிதானம் காட்டியிருந்தால் ரன் விகிதம் குறைந்திருக்கும் நெருக்கடி அதிகரித்திருக்கும், அப்படியில்லையெனில் அஸ்வினை அடிக்கப் போயிருந்தால் அவுட் ஆகியிருக்கவும் வாய்ப்பு இருந்தது, இத்தகைய பலதரப்பட்ட சாத்தியங்களை விடுத்து ராஜ்புத், ஸ்டாய்னிஸ், அக்சர் படேலை நம்பியிருந்தது ஏன் என்று புரியவில்லை. ஏன் இந்தக் கேள்வி எழுகிறது எனில் ஸ்டாய்னிஸின் ஒரு ஓவரில் குருணால் பாண்டியா 2 சிக்ஸ் ஒரு பவுண்டரியுடன் 19 ரன்களை விளாச, அங்கிட் ராஜ்புத்தை பொலார்ட் 14வது ஓவரில் 1 சிக்ஸ், 2 பவுண்டரிகள் உட்பட 18 ரன்கள் விளாசினார். 6 ஓவர்களில் 60/3 என்று இருந்த மும்பை 14வது ஓவரில் 134/4 என்று ஆனது. ஸ்டாய்னிஸ் குருணால் பாண்டியாவை வீழ்த்தினாலும் அவர் சேதங்களை ஏற்படுத்தி 32 ரன்களில் வெளியேறினார். அவர் விக்கெட்டை வீழ்த்திய அதே ஓவரில் ஸ்டாய்னிஸை பொலார்ட் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் வெளுத்து வாங்கினார். 15 ஓவர்களில் 151 என்று போன பிறகு 16வது ஓவரில் அஸ்வின் தன் 2வது ஓவரை வீச வருகிறார். இதற்கு என்ன அர்த்தம்?

கடைசியில் பொலார்டை 50 ரன்கள் எடுத்த பிறகு அஸ்வின் வீழ்த்தினார், பென் கட்டிங்கையும் அஸ்வின் வீழ்த்தி 3 ஓவர்கள் 18 ரன்களுக்கு 2 விக்கெட் என்றாலும் தன் 4வது ஓவரை அவரால் வீச முடியவில்லை, அப்படியும் கடைசி ஓவரை அவர் வீசியிருக்கலாம் காரணம் மெக்லினாகன், மார்க்கண்டேதான் கிரீசில் இருக்கின்றனர். மோஹித் சர்மாவிடம்தான் கொடுத்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 186/8 என்று வலுவான ஸ்கோரை எட்டியது. ஆண்ட்ரூ டை மீண்டுமொரு அற்புத ஸ்பெல்லில் 16 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அக்சர் படேல் 3 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்தார் அவரையும் முடிக்கவில்லை, அஸ்வின் 3 ஓவர்கல் 18 ரன்கள் தானும் முடிக்கவில்லை. இருவரும் 6 ஓவர்களில் 42 ரன்களைத்தான் விட்டுக் கொடுத்தனர், வேகப்பந்து வீச்சாளர்கள் மீதமுள்ள 10 ஓவர்களில் 123 ரன்களைக் கொடுத்துள்ளனர், என்ன கேப்டன்சி இது? ஆனால் கேட்கக்கூடாது, உஷ் கண்டுக்காதீங்கதான்!

ராகுல் அருமை... ஆனால் வீண்:

இந்தப் பிட்சில் தேவைக்கும் அதிகமான ஸ்கோரை மும்பை எடுக்க அனுமதித்தது அஸ்வினின் கேப்டன்சி. விரட்டும் போது ராகுல் சிக்சருடன் தொடங்கினார். ஆனால் பும்ரா மிக அருமையாக 1 ரன் தான் கெய்ல், ராகுலுக்கு தன் முதல் ஓவரில் கொடுத்தார்.

உடனேயே ஹர்திக் பாண்டியாவைக் கொண்டு வந்தாக வேண்டுமே? கொண்டு வந்தார், கெய்ல், ராகுல் 3 பவுண்டரிகள் 1சிக்சரை விளாச 19 ரன்கள் வந்தது. இன்னுமாடா இந்தப் பாண்டியாவை ஊர் நம்புகிறது? மெக்லினாகன் பவுன்சரில் ஹூக் ஷாட்டில் 18 ரன்களுக்கு கெய்ல் வெளியேறினார்.

அப்போது இணைந்தனர் ராகுலும், பிஞ்ச்சும், விக்கெட்டை இழந்து விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு தந்திரமாக கட்டுப்பாடுடன் கூடிய ரன் ஸ்கோரிங் ஆட்டத்தை வெளிப்படுத்தினர், ராகுல் இலக்கை விரட்டுவதன் தாரக மந்திரத்தைக் கற்றுக் கொண்டு விட்டார், இன்னிங்ஸை கட்டமைக்கும் விதத்தையும் தேர்ந்துள்ளார். 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அரைசதம் கண்டார். 16 ஓவர்கள் முடிவில் 145/1 என்று அருமையாகவே இருந்தது. பிஞ்ச் திடீரென பொங்கி எழுந்தார் தவறான பவுலரை அடிக்கத் தேர்ந்தெடுத்தார், அது பும்ரா, லெந்த் பந்தை கண்ணைமூடிச் சுற்ற பந்து வானில் இருளில் புள்ளியாக மறைந்தபோது எங்கோ மைதானத்துக்கு வெளியே என்றுதான் நினைத்தோம், ஆனால் அது இறங்கும் போது மைதானத்துக்குள் அருகிலேயே இறங்கியது ஹர்திக் பாண்டியா அதனை பிடித்தார், கடினமான கேட்ச். பிஞ்ச் வெளியேறினார்.

ஆட்டம் ராகுலின் கையில் இருந்தது. கடைசி 5 ஒவர்களில் 60 எனும்போது கிங்ஸ் லெவனுக்கு வாய்ப்பிருந்தது. அப்பொதுதான் மயங் மார்க்கண்டே ஓவரில் ராகுலும் பிஞ்ச்சும் 18 ரன்கள் சேர்க்க 24 பந்துகளில் 42 என்று இலக்கு சாதகமானது. ஆனால் பும்ரா பிஞ்ச் உட்பட அருமையான ஸ்பெல்லில் 2 ஒவர்களில் 10 ரன்களுகு 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதில் ராகுலும் 60 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 94 ரன்கள் எடுத்து பும்ராவின் விக்கெட்டாக கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் கிங்ஸ் லெவன் 3 ரன்கள் குறைவாக முடிந்தது. அக்சர் படேல் 10 ரன்களில் நாட் அவுட்டாக முடிந்தார், யுவராஜ் சிங் பாவம் கால்காப்புடன் நீண்ட நேரம் காத்திருந்து கடைசியில் இறக்கப்பட்டார், அவரை ஆஜானுபாகுவாக உலக பவுலர்களை அச்சுறுத்திய வீரராகப் பார்த்து விட்டு இப்படி பந்து மட்டையில் சிக்காமல் திண்டாடுவதைப் பார்க்க வருத்தமாக இருந்தது. 1 ரன்னில் மெக்லினாகனிடம் அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது பாவம் இன்னும் ஏன் அவருக்கு இந்தக் கிரிக்கெட் பிணைப்பு என்ற கேள்வியே வருத்தத்துடன் எழுந்தது. மும்பை இந்தியன்ஸ் 12 புள்ளிகளைப் பெற்றது, இதற்கு அஸ்வினின் கேப்டன்சி உதவியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்