‘விரக்தி’ - இன்ஸ்டாவில் புகைப்படம் பகிர்ந்த வினேஷ் போகத்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் தனக்கு வெள்ளிப் பதக்கம் வேண்டும் என வினேஷ் போகத் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பதக்கம் பெறுகின்ற வாய்ப்பை இழந்ததன் விரக்தியை வெளிப்படுத்தும் நிலையில் இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை வினேஷ் போகத் பகிர்ந்துள்ளார்.

தனது நெற்றியில் கைகளை வைத்துக் கொண்டு ஆடுகளத்தில் சாய்ந்திருப்பது மாதிரியான படத்தை அவர் பதிவிட்டுள்ளார். அதில் கேப்ஷன் எதுவும் இடம்பெறவில்லை. இருப்பினும் அது சமூக வலைதள பயனர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அந்தப் படம் விரக்தியின் வெளிப்பாடு போல் இருப்பதால் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு கமெண்ட் மூலம் ஆறுதல் வார்த்தை சொல்லி வருகின்றனர். ‘எப்போதுமே நீங்கள் சாம்பியன்’, ‘மகளே கலங்காதே’, ‘நீங்கள் வலுவாக கம்பேக் கொடுப்பீர்கள்’, ‘எழுந்துவா’ என அந்த கமெண்ட்கள் நீள்கின்றன.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார்.

தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். அதில், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தொடர்ந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக நடுவர் மன்றம் தீர்ப்பு அளிக்காமல் காலம் தாழ்த்தியது. இந்த சூழலில் அவரது மனு கடந்த 14-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும் 15 நாட்கள் காலத்துக்குள் மீண்டும் மனு செய்யப்படும் என வினேஷ் போகத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE