துலீப் டிராபி அணிகளும், வீரர்கள் தேர்வும் - பிராந்தியப் பன்முகத்தன்மை சீர்குலைவுக்கு அடித்தளமா?

By ஆர்.முத்துக்குமார்

துலீப் டிராபி என்பது தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம் என்று 4 மண்டலங்களுக்கு இடையேயான போட்டித் தொடராக இருந்தபோது பிராந்தியப் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட்டது. இப்போது 60 வீரர்களை ஷார்ட் லிஸ்ட் செய்து 4 அணிகளாக ரேண்டமாகப் பிரிப்பதன் மூலம் மண்டலங்களுக்கு இடையிலான ஓர்மையும் பிராந்தியப் பன்முகத்தன்மையும் குலைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5-ம் தேதி பெங்களூருவில் துலீப் டிராபி தொடங்குகிறது. இதில் ஏ,பி,சி,டி என 4 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதலில் வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம் மோதும் போட்டித் தொடராக இருந்த போது ஒவ்வொருவருக்கும் ஒரு மண்டல, பிராந்திய அடையாளம் இருந்தது. அந்த பிராந்திய அடையாளத்தின் மூலம் போட்டித்தன்மையும் அதிகமாக இருந்தது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா வீரர்கள் தெற்கு மண்டலத்துக்கு தேர்வு செய்யப்பட்டு ஆடும்போதும், இதேபோல் வடக்கு, மேற்கு, கிழக்கு மண்டல வீரர்கள் அந்தந்த பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து ஆடும்போது பிராந்திய ஒற்றுமை வலுப்பெறுவதோடு போட்டி என்பது நம் மண்டலம் வெற்றி பெற வேண்டும் என்று ஆடப்படுவதால் சுவாரஸ்யம் கூடுதலாக இருந்தது. இப்போது ஏ,பி,சி,டி என்று வீரர்களைக் கலந்து கட்டி எடுத்து அணிகளைத் தேர்வு செய்வதில் எந்த ஒரு தர்க்கமும் இல்லாமல், ஏதோ செலக்‌ஷனுக்கு அணி அணியாகப் பிரித்து ஆடுவார்களே அப்படி ஆக்கப்பட்டுள்ளது துலீப் டிராபி. பிசிசிஐ என்பது அப்போது மற்ற மண்டல, பிராந்திய வாரியங்களுடன் இணைந்த கூட்டாட்சி தத்துவத்தைக் கடைப்பிடிக்கப் பணிக்கப்பட்டது.

ஆனால், இப்போதோ ரேண்டமாக வீரர்கள் பட்டியலை வைத்துக் கொண்டு ‘ஏய் நீ ஏ டீம், நீ பி டீம், நீ சி, நீ டி’ என்று கைக்கு வந்தபடி எந்த ஓர் அறிவார்ந்த அடிப்படைகளும் இன்றி காரண காரிய அடிப்படைகளும் இன்றி டீம் பிரிக்கப்பட்டு அதை துலீப் டிராபி என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இப்போது இந்திய அணி தேர்வுக்காக நடத்தப்படும் தேர்வு போட்டியாகச் சுருக்கப்பட்டு விட்டதே தவிர, நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் போட்டித் தொடராகவும் இல்லை. வீரர்கள் தங்கள் கிரிக்கெட் திறன்களை தங்கள் மண்டலத்தின் வெற்றிக்காக வெளிப்படுத்துவதை விடுத்து, அனைத்து வீரர்களும் சொந்த நலன்களுக்காகவும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், தனிப்பட்ட வீரர்களுக்கிடையேயான போட்டியாக மாறி நீயா, நானா என்பதாகவும் மாறியுள்ளது. மேலும் கிரிக்கெட் ஓர் அணிக்கான போட்டி என்பது காணாமல் அடிக்கப்பட்டுள்ளது.

மண்டலம் என்னும் போது அந்தந்த பிராந்தியங்களில் வாய்ப்புக் கிடைக்காத வீரர்களுக்கும் மண்டல அளவில் வாய்ப்பு கிடைக்கும். இப்போது 60 வீரர்களை ஒட்டுமொத்தமாக எந்த அடிப்படையில் தேர்வு செய்து, எந்த அடிப்படையில் 4 அணிகளாகப் பிரித்துள்ளனர் என்பது யாருக்கும் தெரியாது. மேலும் மண்டலங்களாக பிரித்து ஆடும்போது அணித்தேர்வு அந்தந்த மண்டலங்களின் தேர்வுக்குழு சார்ந்ததாக இருந்தது. இப்போது பிசிசிஐ-யின் இந்திய அணித் தேர்வுக்குழுதான் இந்த 60 வீரர்களை ஷார்ட் லிஸ்ட் செய்கிறது. இப்படிச் செய்வது சில பிரமாதமான வீரர்களின் விடுபடலுக்குத்தான் வழிவகுக்கும். டி.நடராஜனுக்கு எந்த அணியிலும் இடமில்லை ஏன்? மோசின் கான் என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஏன் மிஸ் ஆனார்? அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் போன்றவர்கள் இல்லவே இல்லை. மண்டல வாரியாக செலெக்‌ஷன் செய்தால் இவர்களும் அணியில் இருந்திருப்பார்களே?

கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், ருதுராஜ் கெய்க்வாட், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன் என்றல்லவா அணி இருக்க வேண்டும். மண்டல வாரியாகத் தேர்வு செய்திருந்தால் சாய் சுதர்ஷன், டி.நடராஜன் வாய்ப்புப் பெற்றிருப்பார்களே! கேரளாவின் சச்சின் பேபி 7 போட்டிகளில் 830 ரன்களை கடந்த ரஞ்சி சீசனில் சராசரி 83 எடுத்தார். 4 சதம், 4 அரைசதம். இவர் தெற்கு மண்டலம் என்று இருந்தால் செலக்ட் ஆகியிருப்பாரே. அதே போல் கடந்த ரஞ்சி சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் பாண்டிச்சேரியைச் சேந்த கவுரவ் யாதவ். இவர் சாய் கிஷோருக்கு அடுத்த இடத்தில் 41 விக்கெட்டுகளுடன் 14.58 என்ற சராசரியுடன் இருக்கிறார். இவர் எங்கே? இப்படியாக ஒவ்வொரு மண்டலத்திலும் கேள்விகள் உள்ளன.

எனவே துலீப் டிராபியை அந்தந்த பிராந்தியப் பிரதிநிதித்துவம் கொண்ட மண்டலங்களுக்கு இடையிலான கிரிக்கெட்டாக நடத்தும்போது அதிக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மண்டல, பிராந்திய அணித்தேர்வாளர்களுக்கு அணித்தேர்வில் ஒரு வாய்ஸ் இருக்கும். இப்போது எல்லாம் மையப்படுத்தப்பட்டு ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுவும் பிசிசிஐ தலைவர் ராஜர் பின்னி வாயைத்திறப்பதில்லை.

தலைவருக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது. ஆனால் இப்போதோ பிசிசிஐ செயலர் அணித்தேர்வு பற்றி பேட்டியும் வீரர்களுக்கான கட்டளைகளையும் இட்டுக் கொண்டிருப்பது பிசிசிஐ-யை பன்முகத்தன்மையிலிருந்து ஒற்றைத்தன்மைக்கு ஒடுக்கும் முயற்சியாக தெரிகிறது. இது வெறும் நிர்வாக அளவில் இருக்கும் ஆபத்தான நடைமுறை. இந்தியாவின் உள்நாட்டுக் கிரிக்கெட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைப்பதாகப் போகும் போதும் இதனால் வீரர்கள் பலர் வாய்ப்பில்லாமல் விடுபடுவதும் பெருகி ஒற்றை நபரிடம் அதிகாரம் குவிவதால், ஒட்டுமொத்த சிஸ்டமே சீர்குலைவதில் போய் முடியும் என்பதே இப்போதைய கவலை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்