‘வினேஷ் போகத்... நீங்கள் தேசத்தின் கோஹினூர்!’ - பஜ்ரங் புனியா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் தனக்கு வெள்ளிப் பதக்கம் வேண்டும் என்று இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அதனை விமர்சிக்கும் வகையில் எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா.

அதோடு சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் கையில் தேசியக் கொடியை ஏந்திய வினேஷ் போகத்தை காவல் துறையினரின் அடக்குமுறைக்கு ஆளாவது போன்ற படத்தை பகிர்ந்துள்ளார். இது கடந்த ஆண்டு மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த புகைப்படம்.

“நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்கள்” என தனது ட்வீட்டில் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக அவர் பதிவு செய்த மற்றொரு ட்வீட்டில், “இருள் நேரத்தில் உங்கள் பதக்கம் பறிக்கப்பட்டுள்ளதாக நான் நம்புகிறேன். உலக அளவில் வைரத்தை போல நீங்கள் மின்னுகிறீர்கள். நீங்கள் தேசத்தின் கோஹினூர். பதக்கம் வேண்டுமென விரும்புவோர் அதனை ரூ.15 கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகத் மனு தள்ளுபடி: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார்.

தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். அதில், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். வெள்ளிப் பதக்கத்தை தனக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு நடுவர் மன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தொடர்ந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக நடுவர் மன்றம் தீர்ப்பு அளிக்காமல் காலம் தாழ்த்தியது. இந்த சூழலில் நேற்று (புதன்கிழமை) அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சொல்லி அவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜனவரியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தை தொடங்கினர். இதில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் முக்கிய அங்கம் வகித்தனர். பல வாரங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிஜ் பூஷணுக்கு எதிராக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE